ஐரோப்பா மற்றும் சில சிறு பசிபிக் தீவு நாடுகள் வானிலை மாற்றம் குறித்த மாற்று ஒப்பந்தத்தை தயாரித்துள்ளதாகவும், இதனால் வளர்ந்த நாடுகளை சட்டரீதியாகப் பிணைக்கும் கியோட்டோ ஒப்பந்தம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கான்குன் மாநாட்டுச் செய்தி வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இதனால் வளர்ந்த நாடுகள் கியோட்டோ ஒப்பந்தத்தை குழிதோண்டி புதைத்து வளரும் நாடுகளை மட்டும் வெப்பவாயு வெளியேற்றக்குறைப்பில் சட்டரீதியாகப் பிணைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ஆத்திரம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வளர்ந்த நாடுகளை வெப்பவாயு வெளியேற்றத்தைக் கடுமையாக வலியுறுத்தும் கியோட்டோ ஒப்பந்தம் பின்னுக்குத் தள்ளப்பட்டால் கான்குன் மாநாட்டில் பெரிய சச்சரவுகள் ஏற்படும் நிலையும் தோன்றியுள்ளது.
ஜப்பான் ஏற்கனவே கியோட்டோ ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம் என்று கூறியிருப்பதும் அதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் கான்குன் மாநாட்டில் தினசரி வாக்குவாதங்களாக இருந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் மெக்சிகோ அதிபர் புதிய ஒப்பந்தத்தைத் தயாரித்துள்ளார். அதாவது இந்தச் சண்டைகளை அது தீர்த்து வைக்கும் என்று நம்பப்பட்டாலும் அது செல்வம் கொழிக்கும் நாடுகளுக்கு ஆதரவாகவே அமையும் என்ற சந்தேகங்களும் வலுத்து வருகின்றன.
பிரிட்டனும் மற்றும் பிற 3 நாடுகளை ஒரு சிறு பிரதியை உருவாக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது பிற்பாடு முழுப்பிரதியில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்த மாற்று ஒப்பந்தம் கோபன்ஹேகன் மாநாட்டு முடிவில் மேற்கொள்ளப்பட்ட கடப்பாடற்ற அல்லது மேற்கத்திய நாடுகளை சட்டரீதியாகப் பிணைக்காத உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்ளச்செய்யும் நிலைக்குக் கொண்டு செல்லும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இது அமெரிக்கா உள்ளிட்ட பிற அதிவெப்பவாயு வெளியேற்ற நாடுகளுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
"சிறு குழு அடங்கிய பிரதிநிதிகள் ஒப்பந்த வரைவை உருவாக்குவது பயனளிக்காது." என்று பொலிவியா நாட்டு ஐநா தூதர் கூறியுள்ளார்.
மேலும் பொலிவியா, சவுதி அரேபியா நாட்டுப் பிரதிநிதிகள் மூடிய அறைக்குள் நடக்கும் விவகாரங்கள் குறித்து மெக்சிகோ அதிபரிடம் புகார் தெரிவித்துள்ளனர். என்ன முடிவு எட்டப்பட்டாலும் அது அனைத்து நாடுகளுக்கும் வெளிப்படையாக தெரியப்படுத்துவது அவசியம் என்று இவர்கள் மெக்சிகோ அதிபரிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
வெளிப்படையாக நடக்கும் விவாதங்களில் ஒரு பேச்சும், மூடிய அறைகளில் நடைபெறும் விவாதங்களில் வேறு விதமான பேச்சுக்களும் இருந்துவருவதால் கான்குன் மாநாட்டில் வானிலை மாற்றத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்கும் ஏழை நாடுகளுக்கு நீதி கிடைக்காது என்ற குரல்கள் அங்கு எழுந்துள்ளன.
பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய குழு 'பேசிக்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடுகள் தங்களிடையே வெவ்வேறு நலன்களைக் கொண்டிருந்தாலும் சரியான விதத்தில் ஒற்றுமை காத்து அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வானிலை மாற்ற விவகாரத்தில் கருத்து வேற்றுமைகளை உருவாக்கி வருகின்றன இந்தக் கூட்டணியை முறியடிப்பதன் மூலமே கோபன்ஹேகன் வெற்று ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உதவும் என்று அமெரிக்கா கருதுவதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியாகியிருப்பதும் மேற்கூறிய சூழலுடன் பொருத்திப் பார்க்கப்படவேண்டியது.