இம்மாதம் மெக்சிகோவில் உள்ள கான்குன் நகரில் நடைபெற்ற ஐ.நா.வானிலை மாநாட்டில் தீட்டப்பட்ட ஒப்பந்த வரைவைப் புறக்கணித்த ஒரேநாடு பொலிவியா. இதனால் அந்த நாட்டின் மீது அதிருப்தி அதிகமானது. இதனையடுத்து ஐ.நா-விற்கான பொலிவியா நாட்டு தூதர் பாப்லோ சலான் புறக்கணிப்பிற்கான காரணங்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள பத்தி ஒன்றில், " கான்குன் ஒப்பந்த வரைவின் மீதான விவாதங்களே நடைபெறவில்லை, மாறாக ஒப்புக் கொள்ளும்படியான வலியுறுத்தல்தான் இருந்தது. வரைவின் மீதான விவாதங்களும் இல்லை, கருத்தொற்றுமையும் இல்லை ஆனால் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பலரும் இந்த ஒப்பந்த வரைவை "சரியான பாதையை நோக்கிய முதல் அடியெடுப்பு" என்று வர்ணித்தனர். ஆனால் இது ஒரு மிகப்பெரிய பின்னடைவைத்தான் சாதித்தது. வெப்பவாயு வெளியேற்றக்குறைப்பில் பிணைப்பு ரீதியான உறுதியான அளவுகளுக்கு பதிலாக தனித் தனி நாடுகளின் குறைப்பிற்கான உறுதி மொழி ஏற்கப்பட்டது. ஆனால் அந்தக் குறைப்பு விகிதங்கள் நிச்சயம் போதுமானதாக இல்லை.
வெப்ப அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பேசுவதற்கு பதிலாக 4 டிகிரி செல்சியஸ் அதிகமாவதற்கான ஒப்பந்த வரைவாகவே அது முடிந்து போனது. உலகில் அதிக அளவில் புவிவெப்ப வாயுக்களை வெளியேற்றும் நாடுகளுக்குச் சாதகமாக ஏகப்பட்ட விஷயங்கள் அந்த ஒப்பந்த வரைவில் காணப்பட்டன. மீண்டும் கரியமிலவாயுச் சந்தை, அல்லது அது போன்ற வணிக உத்திகளே ஆதிக்கம் செலுத்தின.
வானிலை மாற்றங்களின் விளைவுகள் பற்றிய விஞ்ஞான உண்மைகளை அறிந்த பலரும் இந்த கான்குன் உடன்படிக்கை பொறுப்பற்றது என்பதை ஒப்புக் கொள்வர்.
நாங்கள் மட்டுமே ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எங்கள் மீது பழமைவாதிகள், பிடிவாதக்கார்கள் என்ற கெட்டபெயர் சூட்டப்பட்டது. ஆனால் எதிர்ப்பில் நாங்கள் மட்டுமில்லை. மற்ற நாடுகளும், சமூக இயக்கங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எங்கள் எதிர்ப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்துள்ளனர்.
பலகோடி மக்கள் வாழ்வை பணயம் வைக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததே மிகப்பெரிய பொறுப்பான செயல் என்று நாங்கள் கருதுகிறோம்.
எங்கள் நாடு மிகச்சிறிய நாடு, ஆனால் மற்ற நாடுகளின் வெப்பவாயு வெளியேற்றத்தினால் எங்கள் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
எங்கள் தலைநகர் லா பாஸ் இன்னும் 30 ஆண்டுகளில் வறண்ட பூமியாக மாறிவிடும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பூமியையும், உயிர்களையும் காப்பாற்றும் எங்களது உன்னத லட்சியத்தை மூடிமறைக்கும் எந்த ஒரு சுயநலவாத ஒப்பந்தத்தையும் ஏற்கமுடியாது.
நாங்கள் கோபன்ஹேகன் ஒப்பந்தத்தை புறக்கணித்ததால் எங்களுக்கு அமெரிக்கா தருவதாயிருந்த வானிலை மாற்ற நிதியை தராமலேயே இருந்து வருகிறது.
நாம் இதுவரை சந்திக்காத நெருக்கடியை சந்தித்து வருகிறோம். பொய்யான வெற்றிகள் பூமியைக் காப்பாற்றி விடாது. பொய்யான ஒப்பந்தங்கள் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.
எனவே நாம் சந்தித்து வரும் நெருக்கடிகளை கவனத்தில் கொள்ளும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒன்று திரண்டு போராடுவோம்."
இவ்வாறு பாப்லோ சலான் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.