இந்தோனேஷியாவுக்காக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் நடத்திய ஆய்வின்படி, மழைக்காடுகளை வளர்ப்பதால் 3 மடங்கு பொருளாதாரப் பயன்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தோனேஷியாவில் பாமாயில் உற்பத்தி ஆலைகளுக்காக காடுகள் தாரை வார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாமாயில் ஆலைகளைக் காட்டிலும் 3 மடங்கு அதிக வருவாய் காடுகளை வளர்ப்பதில் கிடைக்கிறது என்று இந்த ஐ.நா. ஆய்வு தெரிவித்துள்ளது.
ஐ.நா. சுற்றுசூழல் உடன்படிக்கைகளின் படி காடுகளை வளர்ப்பது, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது போன்றவற்றினால் கிடைக்கும் தொகைகள் பற்றி அரசுகள் விவாதித்து வருகின்றன.
காடுகள் அழிப்பதைத் தடுப்பது மற்றும் கூடுதல் காடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கு இந்தியா பெரும் ஆதரவு தெரிவித்துள்ளது.
உலகில் காடுகளை அழிப்பதன் மூலம் வெளியாகும் வெப்பவாயு வெளியேற்றம், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் வெளியேறும் வெப்ப வாயு அளவை விட அதிகம்.
மேலும் காடுகள் பூமியைக் குளிர்விப்பதுடன், கரியமிலவாயுவை காடுகள் சேமிக்கும் இடமாகவும் உள்ளது.
பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் 2கோடி ஹெக்டேர்கள் அளவிலான நிலத்தை காடுகள் வளர்ப்புக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் 10 ஆண்டுகளில் 1000 கோடி டாலர்கள் வருவாய்க்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
காடுகள் பகுதியை பிற தொழிற்துறைப் பயன்பாடுகளுக்கு அளிப்பதைக் காட்டிலும் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதால் நாடுகளுக்கு வரும் வருவாய் அதிகம் என்று இந்த ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனால்தான் இந்தியா ஆண்டொன்றிற்கு 4 கோடியே 30 லட்சம் டன்கள் கரியமிலவாய்வு வெளியேற்றத்தை ஒழிக்கவுள்ளது.
இந்தியாவில் 7 கோடி ஹெக்டேர்கள் காடுகள் உள்ளது. பிற நாடுகள் காடுகளை இழந்து வரும் நிலையில் இந்தியா கடந்த ஆண்டுகளில் 30 லட்சம் ஹெக்டேர்கள் காடுகளை கூடுதலாக வளர்த்துள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து வெளியேறும் கரியமிலவாயு வெளியேற்றம் 11% குறைந்துள்ளது.
இந்தியாவில் காடுகள் மூலம் சுமார் 20 கோடிக்கும் மேலான் மக்கள் தொகை பயனடைந்து வருகிறது. காடுகளை வளர்ப்பதால் நீர்ப்பாதுகாப்பு மற்றும், உயிர்ப்பரவல் ஆகியவையும் பாதுகாக்கப்படுகிறது.
தற்போதைய வெப்பவாயுக்கள் வெளியேற்றத்தில் காடுகளை அழிப்பது மட்டுமே 18% பங்களிப்பு செய்து வருகிறது.
தற்போது 2020ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் வெப்பவாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்கவேண்டும் என்று ஐ.நா. கூறியுள்ளது.
அதற்காகவே காடுகளை வளர்ப்பதில் உள்ள பொருளாதாரப் பயன்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.