புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் இந்த நூற்றாண்டுக்குள் 1மீ அதிகரிக்கும் என்று ஆஸ்ட்ரேலியாவின் புதிய ஆய்வுக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனால் நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் கடற்கரையில் நீர் புகுந்து வெள்ளமயமாக்கும் நிகழ்வு இனி சகஜமான ஒன்றாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகள் பூமியின் வெப்ப அளவு அதிகரித்திருப்பது நீக்கமற ஆய்வுகளில் தெரியவந்துள்ளதால் பூமியின் மேற்பரப்பு வெப்பமயமாகி வருகிறது என்பது வெறும் கோட்பாடல்ல உணை என்பது நிரூபணமாகியுள்ளதாக இது பற்றிய ஆஸ்ட்ரேலிய அரசுத் துறை அறிக்கையும் கூறியுள்ளது.
ஆஸ்ட்ரேலிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் ஆய்வாளருமான ஸ்டீஃபன் இது குறித்துக் கூறுகையில், "1990ஆம் ஆண்டை ஒப்பு நோக்குகையில் 2100ஆம் ஆண்டு கடல் நீர்மட்டம் சுமார் 1.0 மீ. உயரும் என்று தெரியவந்துள்ளது" என்றார்.
2007ஆம் ஆண்டு ஐ.நா.சுற்றுச்சூழல் பன்னாட்டு அரசுகள் குழுவின் அறிக்கை 0.8மீ. தான் கடல் நீர்மட்டம் உயரும் என்று தெரிவித்திருந்தது.
தற்போது இந்த ஆய்வறிக்கை 1.0 மீ என்பதுதான் உண்மை நிலவரம் என்று கூறியுள்ளது. துருவப்பகுதிகளில் கடலில் உள்ள பனிப்பரப்பு எவ்வளவு வேகமாக உருகி வருகிறது என்பது பற்றி நாம் உண்மை நிலவரங்களை உலகிற்குக் கூறுவதில்லை என்று பேராசிரியர் ஸீஃபன் தெரிவித்துள்ளார்.
கிரீன்லேண்ட் பனிப்பரப்பு எவ்வளவு வேகமாக உருகி வருகிறது என்பதைப் பார்க்கும்போது அது அதிக அளவில் உருகிவருவதை நாம் ஆராய முடிகிறது என்றார் ஸ்டீபன்.
ஒரு மீட்ட கடல் நீர்மட்டம் உயரும் என்று நாம் கூறினாலும் வேறு சில வர்ணனையாளர்கள் இது மேலும் கூட அதிகமாக இருக்கும் என்றே கருதுகின்றனர் என்றும் அதற்குக் குறைவாக ஒருவர் கூட இதனை அறுதியிடவில்லை என்றும் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.
கடல் நீர்மட்டம் அரை மீட்டர் அதிகரித்தாலே, சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகரங்களின் கடற்கரைப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. மேலும் ஆஸ்ட்ரேலியாவில் ஏற்படும் திடீர் பயங்கர வெள்ளம், காட்டுத்தீ, அதிகரித்து வரும் வெப்ப நிலை ஆகியவற்றையும் ஸ்டீபன் தனது ஆய்வுக்கு சாதகமான சுயதேற்றமாக எடுத்துரைக்கிறார்.
மேலும் ஆஸ்ட்ரேலியாவில் சமீப காலங்களில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்ப நிலை ஒரு காலக்கட்டத்தில் எவ்வளவு நாள் அதிகமாக இருக்கிறது என்கிற விகிதமும் அதிகரித்துள்ளது என்று கூறுகிறார் அவர். அதாவது ஆண்டொன்றில் 15 நாட்கள் அதிவெப்ப நாட்களாக இருக்கும் என்றால் அது தற்போது 30 நாட்களுக்கு அதிகரித்துள்ளது. அதாவது அதி வெப்ப தினங்கள் இரட்டிப்பாகியுள்ளன என்கிறார்.
இதனால் வெப்ப அலைகளும் காடுகள் எரிவதும் அதிகம் ஏற்படுகிறது என்று கூறினார் பேராசிரியர் ஸ்டீஃபன்.