உலகம் முழுதும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆளைக்கொல்லும் பூச்சிக்கொல்லி ரசாயனமான என்டோசல்பானை இந்தியா மட்டும் தடை செய்ய மறுக்கிறது. மரணங்கள், பாதிப்புகள் போதாதாம் நம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, அழிவின் எண்ணிக்கை ஆயிரம், லட்சம் என்று ஆனால்தான் தடை செய்வாராம் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ்!நம் பொருளாதார நிபுணர் (!) பிரதமருக்கோ என்டோசல்பானை தடை செய்தால் கார்ப்பரேட் நிறுவனம் நடுத்தெருவுக்கு வந்து விடுமோ என்ற அச்சம் (!)ஐரோப்பிய யூனியன், ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, மற்ற ஆசிய நாடுகள், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் என்டோசல்பான் தடை செய்யப்பட்டதற்கான காரண காரியங்கள் நம் ஜெய்ராம் ரமேஷுக்குப் போதவில்லை போலும்.என்டோசல்பானின் விஷத்தன்மையை கணக்கில் கொண்டு அதன் பயன்பாட்டை உலகம் முழுதும் தடை செய்ய ஸ்டாக்ஹோம் உடன்படிக்கை மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.அரசு நிறுவனமான இந்துஸ்தான் இன்செக்டிசைடு நிறுவனமே இதனை உற்பத்தி செய்து வருவது இந்த நாட்டில்தான் நடைபெறும்! இதன் மனித, விலங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவு எதிரானது என்று 2009ஆம் ஆண்டே ஸ்டாக்ஹோம் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.குருதியில் நேரடியாகச் சுரந்து மனிதனின் பாலியல் செயல்பாடு முதல் பல்வேறு செயல்பாடுகளுக்குக் காரணமாகும் 'என்டோகிரைன்' சுரப்பியை என்டோசல்பான் பாழடையச் செய்கிறது என்பது பல்வேறு சோதனைகளில் உறுதி செய்யப்பட்ட அறிவியல் உண்மை.
ஆனால் இங்கு கேரளாவில் ஏதோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானத்திலிருந்து உணவுப்பொட்டலம் வீசுவது போல் காசர்கோட் பகுதியில் வானத்திலிருந்து முந்திரித் தோட்டங்களின் மீது பாய்ச்சப்பட்டுள்ளது. விஷத்தை மேலேயிருந்து தூவியது கேரள அரசின் பிளாண்டேஷன் கார்ப்பரேஷன்! இது அரசின் கொலைவெறிச் செயல் இல்லாமல் வேறு என்னவாம்?ஒரு மாநில முதல் அமைச்சரே இதனைத் தடை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருக்கையில், ஜெய்ராம் ரமேஷுக்கு என்னவோ மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அளவில் பெரிதாகத் தேவைப்படுகிறது!மனித, விலங்கு மறு உற்பத்திக் குறைபாடுகளையும், வளர்ச்சியைப் பாதிக்கும் விளைவுகளையும் ஏற்படுத்துவது எண்டோசல்பான் என்பது உலகமறிந்த மருத்துவ உண்மை. மேலும் வேளாண்மையிலும் எண்டோசல்பான் பாதிப்புகளையே அதிகம் ஏற்படுத்துகிறது. பயிர்களை நாசம் செய்யும் சிறு புழு பூச்சிகளை உண்ணும் பூச்சிகளையும் சேர்த்து என்டோசல்பான் அழித்து விடுகிறது. இதனால் உயிரிப்பரவல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விவசாயமே பெரிய அளவில் முடங்கிப் போகிறது.தற்போது கேரளாவில் சலீம் அலி அறக்கட்டளையைச் சேர்ந்த மருத்துவர் வி.எஸ்.விஜயன் அரசே நடத்திய குற்றம் (State Sponsored Crime) என்று என்டோசல்பான் வான்வழித் தூவலைக் கண்டித்துள்ளார்.காசர்கோட் பகுதியில் பல குழந்தைகள் வளர்ச்சிக் குன்றி காணப்படுவதற்கு என்டோசல்பானே காரணம் என்பது நீக்கமற நிரூபிக்கப்பட்ட ஒன்று.
மேலும் முந்திரிக்காடுகளுக்கு அருகில் வசிக்கும் பழங்குடி இனமாகிய கோரகா இனம் என்டோசல்பான் பாதிப்பினால் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்பதையும் மருத்துவர் விஜயன் ஆய்வு செய்யவுள்ளார்.
முந்திரியை உட்கொண்டுதான் நம் நாட்டில் ஏழை ஜனங்கள் உயிர் வாழ்கின்றனரா என்ன? ஏற்றுமதிக்காக முந்திரிகள் வளர்க்கப்படுகின்றன. வளர்ந்த நாடுகளில்தான் முந்திரிப் பயன்பாடுகள் அதிகமுள்ளது. ஏற்றுமதி சார்ந்த கொள்கையை வைத்திருக்கும் நம் அரசு, ஆட்கொல்லி பூச்சிமருந்துகள் பற்றியும் ஆட்கொல்லி ரசாயனங்கள் பற்றியும் என்ன கொள்கை வைத்துள்ளது? ஒரு கொள்கையும் அல்ல என்பதுதான் நாம் ஜீரணிக்க முடியாத உண்மை.
என்டோசல்பான் தெளித்தவுடன் அதற்கே உரிய ரசாயன நடைமுறையில் என்டோசல்பான் சல்பேட்டாக உருமாறுகிறது. இதன் நச்சுத் தன்மையின் காலம் 9 மாதங்கள் முதல் 6 ஆண்டு காலம் வரை நீடிக்கும் என்பதும் அறிவியல் உண்மை. இந்த உண்மைகள் சுற்றுச்சூழல், மற்றும் மானிட ஆர்வலர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டதே.
மேலும் ஒரு இடத்தில் தெளிக்கப்படும் என்டோசல்பானின் விளைவு அந்தப் பகுதியை மட்டும் சார்ந்ததல்ல. பயன்படுத்தப்பட்ட இடத்திலிருந்து அது பல மைல் தூரம் பரவக்கூடியது. அமெரிக்காவில் பல நீர் நிலைகளையும், பல பகுதிகளில் காற்றையும் என்டோசல்பான் மாசுபடுத்தியதாக 2008ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று கூறுகிறது. மீன்களையும் அழித்துள்ளது. அதாவது இவையெல்லாம் பூச்சி மருந்து தெளித்தப் பகுதியிலிருந்து பல மைல் தொலைவில் உள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய என்டோசல்பானை இந்தியா ஆண்டு தோறும் 8,500 டன்கள் உற்பத்தி செய்து வருகிறது. 4,000 டன்கள் உள்ளூர் பயன்பட்டிற்கு 4,500 டன்கள் ஏற்றுமதிக்கு!
கேரளாவில் காசர்கோட் பகுதியில் முந்திரித் தோட்டங்களில் இருபது ஆண்டுகளாக என்டோசல்பான் வான்வழியாகத் தெளிக்கப்பட்டு வருகிறது. போபால் விஷ வாய்வுக் கசிவு அபாயத்திற்கு அடுத்த கட்டத்தில் இந்த என்டோசல்பான் நச்சுத் தன்மை வைக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு கேரளாவில் என்டோசல்பானால் உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 135 பேர்களின் குடும்பத்திற்கு அந்த மாநில அரசு தலா ரூ.50,000 கொடுத்துள்ளது.
இப்படியிருக்கையில் ரோட்டர்டாம், ஸ்டாக்ஹோம் மாநாடுகளில் என்டோசல்பான் விவகாரத்தைச் சேர்ப்பதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. காசர்கோட் விவகாரம் முதல் என்டோசல்பானின் கொடுமை பிரதமருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை.
கேரள அரசு 2010ஆம் ஆண்டு என்டோசல்பானைத் தடை செய்தது. தொடர்ந்து கர்நாடக அரசும் தற்காலிகமாகத் தடை செய்தது. ஆனால் நம் நாட்டு வேளாண் துறை அமைச்சர் ஷரத் பவார் என்டோசல்பானை நாடு முழுதும் தடை செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். சமூக சேவகியும், சுற்றுச்சூழல் நிபுணருமான வந்தனா ஷிவா, ஷரத் பவாரை ஒரு ஊழல் அமைச்சர் என்று சாடியதும் இதற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண மக்களைப் பாதிக்கும் எந்த விவகாரங்களையும் நாம் கண்கொண்டு பார்க்கக்கூடாது, காது கொண்டு கேட்கககூடாது, அதனைப் பற்றி வாய்திறக்கக்கூடாது என்று, காந்தியின் நீதி போதனையை அறிவுறுத்தும் குரங்கு பொம்மையையே காந்தி வழி வந்ததாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி சிதைத்துள்ளது.
ஆயிரம் பொய்யைக் கூறி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் ஆனால் 'வளர்ச்சி' என்ற ஒரே கார்ப்பரேட் பொய்யைக் கூறி லட்சோப லட்ச மக்களை அழிக்கத் துணை போகிறது ‘நம் அரசு’.