ஈஷா சார்பில் கோவை மாவட்டத்தில் பசுமைப் பள்ளி இயக்கம் தொடக்கம்
, புதன், 30 நவம்பர் 2011 (15:43 IST)
கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஈஷா அறக்கட்டளையின் பசுமைக்கரங்கள் திட்டத்துடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கம் என்ற பசுமை இயக்கத்தை துவக்கி உள்ளது. இந்த இயக்கத்தின் துவக்க விழா கடந்த 26ஆம் தேதி வடவள்ளியில் அமைந்துள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழாவில் ஈஷா யோகா மையத்தைச் சார்ந்த அருணகிரி வரவேற்க ஈஷா அறக்கட்டளையின் பசுமைக்கரங்கள் திட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் பசுமைப்பள்ளி இயக்கத்தின் திட்ட விளக்கவுரை வழங்கினார். தமிழக வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் கோவை மாவட்ட பசுமைப் பள்ளி இயக்கத்தை துவக்கி வைத்தார்.விழாவில் கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா.ஆனந்தி, வி.ஷிநீ., ஙி.ணிபீ., கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன், மாநகராட்சி 16வது வார்டு கவுன்சிலர் குமுதம் குப்புசாமி, மேற்கு மண்டல தலைவர் சாவித்திரி பார்த்திபன், பெருமால்சாமி தெற்கு மண்டல தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஈஷா யோகா மையம் சார்பில் வள்ளுவன் நன்றியுரை வழங்கினார். இந்தத் திட்டத்தின்கீழ் கோவை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 300 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் ஈடுபாட்டுடன் பள்ளி வளாகத்திலேயே நாற்றுப்பண்ணை உருவாக்குவது. பின்பு மாணவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகளை தாங்களே பள்ளியிலும் சுற்றுப்புறங்களிலும் நட்டு பராமரித்து வருவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் சார்பில் இந்தத் திட்டத்திற்கு தேவையான விதைகள், பைகள் தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தேசிய பசுமைப்படை அங்கத்தினர்களாக உள்ள மாணவர்கள் இத்திட்டத்தை முன்னின்று நடத்த உள்ளார்கள். பள்ளி குழந்தைகள் நாற்றுப்பண்ணைகளுக்கான பைகளில் மண் நிரப்புதல், விதையிடுதல், நீர் பாய்ச்சுதல், பாதுகாத்தல் மற்றும் வளர்ந்த மரக்கன்றுகளை இடம் பெயர்த்து நட்டு பராமரித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.வடவள்ளியில் அமைந்துள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 40 பள்ளிகளை சேர்ந்த 40 பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள், 80 மாணவர்களைக் கொண்ட பசுமைப்பள்ளி இயக்கத்திணருக்கு செயல் விளக்கப் பயிற்சி மற்றும் பசுமை விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.