ஆர்க்டிக் கடலின் நடுவில் பெருகும் சுத்தமான நீரின் அளவுகளால் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் எதிர்பாராத வானிலை மாற்ற விளைவுகள் ஏற்படும் என்று புதிய விஞ்ஞான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆர்க்டிக் கடலில் உள்ள பனிமலைகள் உருகுவதாலும், நதிநீர் கடலுக்குள் வருவதாலும் சுத்தமான நீரின் பரப்பளவு ஆப்பிரிக்காவின் விக்டோரியா ஏரியில் உள்ள நீரின் அளவைக்காட்டிலும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர் விரைவில் ஆர்க்டிக் கடலிலிருந்து அட்லாண்டிக் கடலுக்குள் செல்லும். இது எப்போது நிகழும் என்று கூற முடியாவிட்டாலும் இதனால் ஏற்படும் வானிலை மாற்ற விளைவுகள் கணிக்க முடியாததாக இருக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடல் நீர் சுழற்சியில் இது பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆல்ஃபிரெட் வெஞீனர் ஆய்வகத்தின் விஞ்ஞானி பெஞ்சமின் ராபே தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு இந்த சுத்த நீர், இதற்கு அடியில் உள்ள வெப்பமான கடல் நீரை பனிப்பாறைகளை நெருங்கவிடாமல் செய்து வருகிறது. இது இப்போதைக்கு பனிப்பாறை உருகுதலை தவிர்த்தாலும், வானிலை சுழற்சி முறை மாறும்போது இந்த சூழ்நிலை மாறலாம் என்கிறார் ராபே.
"கனடா, சைபிரீயாவில் வெப்பநிலை உயர்வால் அங்கிருந்து பெருமளவு நதிநீர் கடலுக்குள் வருகிறது. இது அளவுக்கு அதிகமாக உள்ளது மேலும் பனிப்பாறை உருகுதலும் அதிகமாகியுள்ளது. கடலில் உள்ள பனிப்பாறை உருகுதலும் விரைவில் நடைபெற்று வருகிறது. இதனால் வட அட்லாண்டிக் கடல்நீரின் மேல் பரப்பின் அடர்த்தி நிலைகளில் மாற்றங்களை விளைவிக்கும் இதனால் என்ன ஆகும் என்பதை கணிப்பது கடினம்." என்று நெதர்லாந்தைச் சேர்ந்த கடலாய்வு கழகத்தைச் சேர்ந்த லாரா டீ ஸ்டியர் கூறியுள்ளார்.
கடலின் மேல்பரப்பு நீர் சுத்தமாக ஆக அதன் அடர்த்தி நிலைகளில் மாற்றம் ஏற்படும் இதனால் மிகப்பெரிய புயல்களால் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று தெரிகிறது. மேலும் ஐரோப்பா போகப்போக மேலும் மேலும் குளிரடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.