அமேசான் நதிக்கு பல ஆயிரம் அடிகள் கீழே பூமிக்கு அடியில் இன்னொரு பெரிய நதி ஓடுவதாக பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் மேற்பரப்பில் அமேசான் சுமார் 6,000 கிமீ தூரம் ஓடுகிறது. கிட்டத்தட்ட அதே தூரத்திற்கு பூமிக்கு அடியிலும் ஒரு நதி ஓடுவதாக பிரேசில் தேசிய ஆய்வு அமைப்பைச் சேர்ந்த வலியா ஹம்சா என்பவர் தெரிவித்துள்ளார்.
1970ஆம் மற்றும் 80ஆம் ஆண்டுகளில் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான பெட்ரோபாஸ் தோண்டி தற்போது செயலில் இல்லாத 241 எண்ணெய்க் கிணறுகளில் வெப்பநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கொண்டு அமேசானுக்குக் கீழ் நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோபிராஸ் நிறுவனம் அளித்த கிணறுகளின் வெப்ப்நிலை அளவுகளைக் கொண்டு அமேசானுக்குக் கீழ் பூமிக்கு அடியில் சுமார் 4000மீட்டர்களுக்கும் கீழ் இன்னொரு நதி ஓடுவது தெரிய வந்துள்ளது என்று கூறினார் ஹம்சா.
பிரேசிலின் ஜியோபிசிக்கல் சொசைட்டியில் கடந்த வாரம் இந்த கண்டுபிடிப்புகள் பற்றி உரை அளிக்கப்பட்டது.
இந்த நதி பற்றிய ஆய்வை நடத்திய ஹம்சாவின் பெயரையே இந்த நிலத்தடி நதிக்கும் வைத்துள்ளனர்.
இந்த நிலத்தடி நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் இது பற்றிய முழு விவரம் 2014ஆம் ஆண்டு தெரியவரும் என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமேசான் மழைக்காடுகளில் இந்த நதியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றி ஹம்சா கருத்து கூற மறுத்து விட்டார்.