புவி வெப்பமாக்கும் வாயுக்களை 35 சதவீதம் குறைக்க இந்தியா உறுதி

வியாழன், 8 அக்டோபர் 2015 (17:56 IST)
இந்தியாவிலிருந்து வெளியாகும் புவிவெப்பமாக்கும் வாயுக்களின் அளவை 2030ஆம் ஆண்டுக்குள் 35 சதவீதம் அளவுக்கு குறைக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதியளித்துள்ளது.
2005ஆம் ஆண்டோடு ஒப்பிட்டு, இந்த குறைப்பு செய்யப்படும் என இந்தியா கூறியுள்ளது.


 

 
தங்களுக்குத் தேவையான மின்சாரத்தில் 40 சதவீதத்தை நிலக்கரி, எரிவாயுவைப்பயன்படுத்தாமல் சூரிய சக்தி, காற்று ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்போவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தியா தான் விரும்பிய அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றால், புவியை வெப்பமாகும் வாயுக்களின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
வரும் நவம்பர் மாதம் பாரிஸ் நகரில் பருவநிலை தொடர்பான ஐ.நா. மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், இந்திய அரசு இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்கு புவியை வெப்பமாக்கும் வாயுக்களைக் குறைக்கப் போகின்றன என்ற தகவலை, 196 உறுப்பு நாடுகளிடமும் ஐ.நா. கேட்டிருந்தது.
 
இந்தத் தகவல்களைத் திரட்டி, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைவிட பூமியின் வெப்பம் இரண்டு டிகிரி அளவுக்கு அதிகரிப்பதை தடுக்க முடியுமா என ஐநா. ஆராயும்.


 


 
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று தில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், 2030க்குள் 35 சதவீதக் குறைப்பை எட்ட முடியும் என நம்புவதாகக் கூறினார்.
இருந்தபோதும், தங்கள் உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிட்டுத்தான் இதைச் செய்ய முடியும் என இந்தியா தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், பார்க்கும்போது, வெப்பமாக்கும் வாயுக்கள் ஒட்டுமொத்தமாக அதிகரிப்பதை இந்தியா தடுக்காது.
 
தங்களுடைய புவிவெப்ப வாயு வெளியேற்றம் விரைவில் உச்சத்தைத் தொடும் என்றாலும் 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு, அது குறைய ஆரம்பிக்கும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்குள் தங்களுடைய புவிவெப்ப வாயு வெளியேற்றத்தை 28 சதவீதம் அளவுக்குக் குறைப்போம் என அமெரிக்கா கூறியிருக்கிறது.

அதன்படி, சீனாவும் அமெரிக்காவும் ஒட்டுமொத்தமாக தங்கள் புவிவெப்ப வாயு வெளியேற்றத்தை குறைக்க ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியா அம்மாதிரி வாக்குறுதியை அளிக்கவில்லை.
 
இந்தியக் குடிமக்களில் 30 சதவீதம் பேருக்கு இன்னும் மின்சார வசதி இல்லை என்பதால், அதற்கான வளர்ச்சிப் பணிகளைச் செய்யப்போவதாகவும் அதனால் வாயுக்கள் வெளியேறுவது தொடர்ந்து அதிகரிக்கும் என இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.இந்திய அரசு தற்போது முன்வைத்திருக்கும் திட்டத்தை பாரிஸ் மாநாட்டில் பிற நாடுகள் ஏற்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
 
வேகமாக வளர்ந்துவரும் நாடுகள் புவி வெப்ப வாயுக்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாகவும் அவை பெருமளவில் அதைக் குறைக்க வேண்டுமென வளர்ந்த நாடுகள் கூறிவருகின்றன.
ஆனால், வளர்ந்த நாடுகள்தான் பூமியை மாசுபடுத்தியதாகவும் இருந்தபோதும் அதற்கான தீர்வுகளில் தாங்களும் பங்கேற்பதாக இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்