புவி வெப்பமடைதலால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் விளைவாக உருவாகும் பஞ்சம் காரணமாக 2020ஆம் ஆண்டு சுமார் 5 கோடி மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சுற்றுச்சூழல் அகதிகளாகும் அபாயம் உள்ளதாக வாஷிங்டனில் நடைபெற்ற விஞ்ஞான முன்னேற்றம் குறித்த மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் விஞ்ஞான முன்னேற்றம் குறித்த மாநாடு திங்களன்று முடிவுற்றது. அதில் ஐ.நா.வின் இந்தத் தகவலை அறிவித்தனர்.
வானிலை மாற்றத்தினால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை, உணவுக் கையிருப்பு, கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களின் ஆரோக்கியத்தன்மை ஆகியவை பற்றி இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுற்றுசூழல் நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆப்பிரிக்காவிலிருந்து ஏற்கனவே தெற்கு ஐரோப்பாவிற்கு மேற்க்கூடிய காரணங்களினால் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது.
கிப்ரால்டார் ஜலசந்தியைக் கடப்பதன் அபாயத்தையும் பொருட்படுத்தாது மொராக்கோவிலிருந்து அகதிகள் ஸ்பெயினுக்குள் நுழைவதும், லிபியா, டுனீஷியா ஆகிய நாடுகளிலிருந்து ஆபத்தான படகுகளில் இத்தாலிக்குள் நுழைவதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
டுனீஷியாவில் இருந்து வரும் பரவலான வேலையில்லாத் திண்டாட்டம், உணவுப் பொருள் பற்றாக்குறை ஆகிய்வற்றால் பால்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பாவுக்குள் நுழைந்து வருகின்றனர்.
டுனீஷியாவில் இப்போது நடப்பதை நாம் பின் வரும் உலகிற்கு ஒரு மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம் என்று இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மிச்சிகன் மாகாணப் பலகலைக் கழக பேராசிரியர் ஐவன் டாட் என்பவர் தெரிவித்துள்ளார்.
"ஏற்கனவே ஆப்பிரிக்கர்கள் ஸ்பெயினுக்குள் நுழைவதும் ஜெர்மனிக்குள் நுழைவதும் துவங்கி விட்டன. மத்தியதரை நாடுகளிலிருந்து மேலும் குடிபெயர்வு ஏற்படும். உணவு நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் வடக்குப் பகுதி நோக்கி நகர்வது உறுதி, டுனீஷியாவிலும், எகிப்திலும் இது போன்ற பதற்ற நிலை ஏற்பட உணவு நெருக்கடியே காரணம்." என்று கூறினார் அவர்.
அவர் மேலும் கூறுகையில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் அரசியல், மதம் போன்ற விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டாலும் அங்கு ஏழை மக்கள் தாங்கள் சாப்பிடவேண்டும், தங்கள் குடிம்பத்திற்கு உணவு கிடைக்கவேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த விவவ்காரம்தான் அங்கு மக்கள் எழுச்சிக்குக் காரணம் என்றார்.
"சுற்றுச்சூழல் அகதிகள்" என்ற சொல்லை உருவாக்கியவர் ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழகத்தின் நார்மன் மையர்ஸ் என்பவர். இவர் 2001ஆம் ஆண்டு இந்த புதிய விஷயத்திற்கு இவ்வாறு பெர்யரிட்டுள்ளார்.
பிரிட்டன் ராயல் சொசைட்டி என்ற பத்திரிக்கையில் மயர்ஸ் 2001ஆம் ஆண்டு இந்தப் புதிய நிகழ்வை விவரிக்கையில், "வறட்சி, மண்ணரிப்பு, வறண்ட பாலவனமாதல், காடுகள் அழிப்பு, மற்றும் பிற பிரச்சனைகளால் தங்கள் சொந்த நாட்டில் உணவுப்பாதுகாப்பின்றி வெளியேறுபவர்கள் அல்லது கடும் வறுமைக்கு ஆட்படுவர்கள் ஆகியோரை இந்தப் பதம் குறிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காரணங்களால் இவர்கள் தங்கள் வாழ்வைப் பணயம் வைத்தாவது புகலிடம் தேடி அலைவார்கள் என்றும் அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
வானிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மழை காரணமாக ஏற்படும் புதிய வகைக் காளான்கள் பைர் விளைச்சலையும், பயிரின் தரத்தையும் எதிர்பாராத அளவுக்கு பாதிக்கும், என்றும் வெப்பவாயு வெளியேற்றமும் வான்வெளி நச்சுத் தூசிகளும் தாவரங்களின் அமைப்பை மாற்றி, பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமி தாக்குதல்களிலிருந்து அவை தற்காத்துக் கொள்வதை தடுத்து விடுகின்றன என்று அமெரிக்க வேளாண் துறை ஆய்வாளர் ரே நைட்டன் தெரிவித்துள்ளார்.
மேலும் பெரு வெள்ளங்களினால் அடித்து வரப்படும் விலங்குக் கழிவுகள் மனித உணவுச்சங்கிலுக்குள் ஊடுருவி இனம் புரியாத நோய்களும் பரவியுள்ளதாக இந்த வேளாண் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.