தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 8,822 பேருக்கு அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி களுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியை, பி.எஸ்.ஆர்.பி. எனப்படும் வங்கிப் பணி யாளர் தேர்வாணையம் செய்துவந்தது. தற்போது அப்பணியை, ‘இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.) அமைப்பு செயல் படுத்தி வருகிறது.
இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 20 பொதுத்துறை வங்கிகளில் காலியாகும் கிளர்க், புரபெசனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.
தற்போது, 20 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சுமார் 8,822 புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு அறிவிப்பை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக கனரா வங்கியில் 2,200 இடங்களும், ஐ.டி.பி.ஐ. வங்கியில் 1,350 இடங்களும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 899 இடங்களும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 இடங்களும், யூகோ வங்கியில் 540 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுபட வாய்ப்பு உள்ளது.
முழுமையான பணியிட விவரம் மற்றும் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறன் அவசியம். 13.8.2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகுதி சரிபார்க்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 1.7.2016 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2.7.1986ஆம் தேதிக்கு முன்னரும், 1.7.1996ஆம் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்புத்தளர்வு அனுமதிக்கப்படும்.
முதல் நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பைப் பெறலாம்.