சர்வதேச பொருளாதாரச் சரிவின் காரணமாக அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு செல்வதற்காக பெறப்படும் ‘ஹெ-1-பி’ விசா மீதான இந்தியர்களின் மோகம் குறைந்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் அக்டோபர் முதல் துவங்கும் 2010ஆம் நிதியாண்டில் அமெரிக்கா வருவதற்கான விசா பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏற்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அரசு நிர்ணயித்தபடி 65,000 இந்தியர்களுக்கு ‘ஹெச்-1-பி’ விசா வழங்கப்படும் என்றாலும், தற்போது வரை 45,500 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த 5 வேலை நாட்களில் மட்டும் 42 ஆயிரம் இந்தியர்கள் ஹெச்-1-பி விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் கடந்த ஒன்றரை மாதங்களாக 3,500 விண்ணப்பங்கள் மட்டுமே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை மையத்திற்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவற்றில் சரியாக 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அமெரிக்காவில் மேற்படிப்பு பயில விரும்பும் இந்தியர்களால் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.