தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிநிறுவனத்தில் 2,393 காலி இடங்கள் உள்ளன என்று சென்னை பிராந்திய ஆணையர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஜூலை 8ஆம் தேதி கடைசி நாளாகும்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை பிராந்தியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் உறுப்பினர்களுக்கு வேலை செய்து வருகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிநிறுவனத்தில் இளநிலை பொறியாளர் சமூகப் பாதுகாப்பு உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு 2,393 காலி இடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 630 காலியிடங்களும், 2-வதாக தமிழ்நாட்டில், புதுவையையும் சேர்த்து 328 காலியிடங்கள் உள்ளன. உதவியாளருக்கு ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை ஊதியமாக வழங்கப்படும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டதாரியாக இருக்க வேண்டும். மணிக்கு 5000 விசைத்தாள் அமுக்க வேகம் (தட்டச்சு) பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறி படிப்பிற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
வயது 8.7.2009ல் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு கணிப்பொறி தகவல் தட்டச்சு செயல் திறன் தேர்ச்சி 2 கட்டமாக நடத்தப்படும்.
இளநிலை பொறியாளருக்கு ரூ.9300 முதல் ரூ.14,800 வரை ஊதியமாக வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், கட்டுமானம், எலக்ட்ரிகல் துறையில் டிப்ளமோ படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். சரித்திரம், வரைதல், வடிவமைத்தல் போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு என 2 கட்ட மாக நடத்தப்படும்.
2 பதவிகளுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8ஆம் தேதிக்கு முன்னதாக தபால் பெட்டி எண்:8463, மண்ட பேஷ்வர், போரிவலி (மேற்கு) மும்பை-400 103 என்ற முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் இதற்கான எழுத்து தேர்வு சென்னை, கோவை, மதுரை ஆகியவற்றில் உள்ள வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் நடைபெறும். இந்தியா முழுவதும் செப்டம்பர் 6ஆம் தேதி தேர்வு நடக்கிறது என்று சீனிவாசன் கூறினார்.