Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யு.எஸ். கால் செண்டர் சட்டம் இந்தியாவைப் பாதிக்கும்

Advertiesment
யு.எஸ். கால் செண்டர் சட்டம் இந்தியாவைப் பாதிக்கும்
, வியாழன், 22 டிசம்பர் 2011 (17:31 IST)
தங்களுடைய கால் செண்டர்களை நாட்டிற்கு வெளியே அமைத்து இயக்கிவரும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அளித்துவரும் சலுகைகளை நிறுத்தவும், அரசு கடன்களுக்கான தகுதியை மறுக்கும் அமெரிக்காவின் புதிய சட்ட வரைவு இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய வர்த்தக அமைச்சக செயலர் ராகுல் குல்லர் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த அசோசம் தொழில் அமைப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குல்லர், அமெரிக்காவின் இந்த புதிய சட்ட வரைவு நம்மைப் பாதித்தாலும், இன்றுள்ள பொருளாதாரப் பின்னடைவுக் காலத்தில் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் என்றும், அந்நாட்டில் அதிகரித்துவரும் வேலையின்மையின் எதிர்வினை இது என்றும் கூறியுள்ளார்.

“தங்கள் நாட்டினருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று விடுகிறதே என்கிற காரணத்தினால்தான் இப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது நமக்குக் கவலையளிக்கக் கூடியதுதான். ஆனால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் இதற்கு மேல் அதிகம் எதிர்பார்க்கலாம். இப்போது அமெரிக்கா, இதன் பிறகு ஸ்பெயின், இங்கிலாந்து என்று தொடரும். இன்று அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிலை நாளை ஸ்பெயின், நாளை மறுநாள் இங்கிலாந்து என்று தொடரும்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க சட்ட வரைவு குறித்து கருத்துத் தெரிவித்த நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல், “இது அமெரிக்காவின் தற்காப்பு நடவடிக்கையாகும். இப்படிப்பட்ட நடவடிக்கை சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரானது, தங்களுடைய உள்நாட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காண அயல்நாட்டு நிறுவனங்களின் மீது சுமையை ஏற்றும் அரசியல் நடவடிக்கை இது” என்று கூறியுள்ளார்.

இச்சட்ட வரைவை முன்மொழிந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டூன் பிஸ்ஷப், டேவிட் மெக்கின்லி ஆகியோர், அமெரிக்கா தொழிலாளர் நலத்துறைக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்காமல் தங்கள் கால் செண்டர்களை அமெரிக்காவிற்கு வெளியே கொண்டு சென்று நிறுவிய நிறுவனங்களுக்கு நாள் ஒன்றிற்கு 10,000 டாலர்கள் வரை அபராதம் போட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

அயல் வணிகப் பணித்துறை (பிபீஓ) வரும் ஆண்டில் 14 விழுக்காடு வளர்ச்சியுடன் 14.1 பில்லியன் வருவாயை எட்டும் என்று நாஸ்காம் கூறியிருந்த நிலையில் இந்த அதிர்ச்சி சட்டம் வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil