கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மதுப்பழக்கத்திற்கு உச்ச நீதிமன்றம் மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் சக மாணவர்களை ராகிங் செய்யும் கொடுமையும், இதனால் கொலை அல்லது தற்கொலை செய்யப்படும் பிரச்சினை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், அசோக் குமார் கங்குலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது.
அப்போது, கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மதுப்பழக்கம் காரணமாக ராகிங் என்ற பெயரில் புதிதாக சேரும் மாணவர்களை மூத்த மாணவர்கள் துன்புறுத்துவது மிகுந்த கவலை அளிப்பதாக நீதிபதிகள் கூறினார்கள். பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் ராகிங்கை தடுப்பது தொடர்பான யோசனைகளை தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இதுவரை பதில் அளிக்காத மாநிலங்கள், அடுத்து கட்ட விசாரணைக்கு முன்பு தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு அவர்கள் தள்ளி வைத்தனர்.