உலகளாவிய அளவில் ஏற்பட்டுவரும் பொருளாதார பின்னடைவால் இந்தியாவின் தொழிலக உற்பத்தி குறைந்தாலும், உலகில் வேறு எந்த நாட்டையும் விட மிக அதிக அளவில் புதிய வேலை வாய்ப்புகள் வரும் புத்தாண்டு தொடகத்தில் இந்தியாவில் பெருகும் என்று அது குறித்து ஆய்வு செய்த இரண்டு பெரும் நிறுவனங்கள் கூறியுள்ளன.
உலக அளவில் வேலை வாய்ப்புக்களுக்கு வழி வகுக்கும் மேன் பவர் நிறுவனமும், இந்தியாவின் முதன்மை வேலை வாய்ப்பு நிறுவனமான நெளகிரி.காம் ஆகிய தனித்தனியாக நடத்திய ஆய்வின் முடிவு இதை வெளிப்படுத்தியுள்ளது.
2012 ஜனவரி முதல் இந்தியாவின் பெரு நிறுவனங்கள் பணி இடங்களை வேகமாக நிரப்பத் தொடங்கும் என்றும், அதன் மூலம் அடுத்த காலாண்டிற்கான திட்டங்களை தீட்டும் என்றும் மேன் பவர் நிறுவனம் கூறியுள்ளது.
வேலையமர்த்தும் பணி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே சுறுசுறுப்பாக தொடங்கிவிட்டதென நெளகிரி.காம் ஆய்வு தெரிவிக்கிறது. சேவைத் துறையில்தான் மிக அதிகமான வேலை வாய்ப்பு - 49% கிடைக்கும் என்றும், அதற்கு அடுத்தபடியாக சுரங்கம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு - 47 விழுக்காடு இருக்கும் என்று இரண்டு ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
ஒரு பக்கத்தில் வேலை வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியாக செய்திகள் வந்துள்ள நிலையில், இந்தியாவின் தொழிலக உற்பத்தி அக்டோபரில் இருந்த 5.1 விழுக்காட்டிற்கும் குறைவாக வரும் மாதங்களில் இருந்தால் அதன் பாதிப்பு வேலை வாய்ப்புகளிலும், அன்றாட வாழ்விலும் கடுமையாக பிரதிபலிக்கும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பு கூறியுள்ளது.