தமிழக காவல்துறையில் 328 பெண் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் உள்பட 1,095 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன.
தமிழக காவல்துறையில் காவலர் முதல் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. தற்போது 328 பெண் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் உள்பட 1,095 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிய 88 ஆண் காவல்துறை உதவி ஆய்வாளர்களும், 36 பெண் காவல்துறை உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். சேம நலப்படையில் (ஆயுத படை) 113 ஆண் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களும், 48 பெண் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களும், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற 566 ஆண் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களும், 244 பெண் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு எல்லா பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு. முன்னாள் இராணுவத்தினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீட்டர் இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 167 செ.மீட்டர் உயரம் போதும். மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் 86 செ.மீட்டரும் இருக்க வேண்டும். பெண்களின் உயரம் குறைநëத அளவு 159 செ.மீட்டர் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 157 செ.மீட்டர் போதுமானது. தகுதியுடையோர் எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 70 ஆகும்.
காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தலைமை தபால் அலுவலகங்களிலும், குறிப்பிட்ட உதவி தபால் அலுவலகங்களிலும் இன்று முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தின் விலை ரூ.30. விண்ணப்ப கட்டணம் ரூ.230 ஆகும். இதை தபால் நிலையத்தில் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை 'தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 807, 2-வது தளம், பீ.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் மாளிகை, அண்ணா சாலை, சென்னை-2' என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ வருகிற மே 3ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அம்பத்தூர், அண்ணாசாலை, ஆவடி கேம்ப், மயிலாப்பூர், பூங்காநகர், பரங்கிமலை, தியாகராயநகர், தாம்பரம் ஆகிய தலைமை தபால் அலுவலகங்களிலும், எழும்பூர், கோட்டை, பெரம்பூர், பூந்தமல்லி, தியாகராயநகர் வடக்கு, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் கிழக்கு ஆகிய தபால் அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
மேலும், பாரிமுனையில் உள்ள ஜெனரல் தபால் நிலையத்திலும் விண்ணப்பங்கள் வாங்கலாம் என்று சென்னை நகர மத்திய அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.