கிறித்தவ, முஸ்லீம் தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்
, புதன், 5 ஜனவரி 2011 (14:36 IST)
கிறித்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அந்தப் பிரிவின் கீழ் அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்லாமா? கூடாதா? என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.கிறித்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களையும், இந்து, பெளத்த, சீக்கிய மதங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கான பட்டியலில் சேர்த்து அவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை கல்வி, வேலை வாய்ப்பில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு நியமித்த, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்தது.இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பொது நல மனுக்களுக்கான மையம், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத அடிப்படையில் பாரபட்சத்துடன் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், சமூக, பொருளாதார அடிப்படைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தது.இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், சுதந்திரக் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது நல வழக்கு மையத்தின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் பிராசாந்த் பூஷண், “இந்து, சீக்கிய, பெளத்த தலித் மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு உண்டு, ஆனால், கிறித்தவ, இஸ்லமிய மதங்களில் உள்ள தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு பெற தகுதியற்றவர்கள் என்பது சரியாகுமா? இவ்வாறு செய்வது மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது என்கிற அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கு புறம்பானது ஆகாதா? என்று வினா எழுப்பினார்.
1950
ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது இந்து தலித்துகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளித்தது. 1959ஆம் ஆண்டு சீக்கிய மதத்தில் உள்ள தலித்துகள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 1990இல் பெளத்த மதத்திற்கு மாறிய தலித்துகளும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர் என்கிற விவரங்களை எடுத்துரைத்த பிரசாந்த் பூஷண், “இது அரசியல் ரீதியான மிகவும் உணர்வுப் பூர்வமான பிரச்சனையாகும். மத்திய அரசு அமைத்த நீதிபதி ரங்கநாத் ஆணையம் பரிந்துரைத்து, அதனை தேச தாழ்ப்பட்டோர் ஆணையம் ஏற்றுக்கொண்ட பின்னரும் அதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை” என்று கூறினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இதனை நாங்கள் ஆழமாக ஆராய வேண்டும். எங்களுக்கு இதிலுள்ள அரசியலைப் பற்றிக் கவலையில்லை. நீதிபதி ரங்கநாத் அளித்த பரிந்துரை இந்திய அரசமைப்பின் படி சரியானதா? இல்லையா? என்பதையே நாங்கள் முடிவு செய்ய முடியும். ஆனால் அவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமா? இல்லையா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினர்.தேச மத மற்றும் மொழி சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பின்னரும் தாழ்த்தப்பட்டோர் நடத்தப்படும் கீழான நிலை மாறவில்லை, அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சமூக, கல்வி நிலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறியிருந்தார்.நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அரசுக்கு அளித்த பரிந்துரையின் மீது தனது கருத்தை பதிவு செய்த தேச தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களை, அந்தப் பட்டியலில் மீண்டும் சேர்ப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால், தாழ்த்தப்பட்டோருக்கு தற்போதுள்ள 15 விழுக்காட்டிலேயே அவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க முற்படக்கூடாது என்று கூறியிருந்தது.அவர்களின் மக்கட் தொகை பங்கிற்கு ஏற்ற அளவிற்கு தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருந்த தேச தாழ்த்தப்பட்டோர் ஆணையம், ஒட்டு மொத்த இட ஒதுக்கீட்டிற்கு 50 விழுக்காடு உச்ச வரம்பை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளதையும் அரசிற்கு நினைவுபடுத்தியுள்ளது.