பேருந்து நடத்துவர் வேலைக்கு ஊனமுற்றோரை நிராகரிக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
நெல்லையை சேர்ந்த சுடலை என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் உடல் ஊனமுற்றவன். நடத்துனர் உரிமம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன்.
நெல்லை போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் பணிக்கான நேர்காணல், கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி நடத்தப்பட்டது. பதிவு மூப்பில் இருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை.
தகவல் உரிமை சட்டத்தில் கேட்டபோது, உடல் ஊனமுற்றோரை நடத்துனராக நியமிக்க முடியாது என அதிகாரிகள் பதில் தெரிவித்தனர். போக்குவரத்து கழகங்களில் ஊனமுற்றோர் நடத்துனராக பணிபுரிகின்றனர். எனவே, எனக்கு நடத்துனர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவில், சர்வதேச அளவில், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படு கின்றன. இந்நிலையில், போக்குவரத்துகழக மேலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரிகள் எவ்வித கவனமும் செலுத்தாமல், நடத்துனர் பணிக்கு மனுதாரரை நிராகரித்துள்ளனர். ஊனமுற்றவர் என்பதற்காக வேலை மறுக்கக் கூடாது.
வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் மனுதாரரின் பதிவு மூப்பு விவரத்தை போக்குவரத்து கழகத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு அதை பரிசீலித்து தகுதியிருந்தால் மனுதாரருக்கு 4 வாரத்தில் நியமனம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.