இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, இந்த ஆண்டில் மட்டும் 5,000 முதல் 7,000 பேரை பணிக்குத் தேர்வு செய்யவுள்ளது என்று அதன் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் கூறியுள்ளார்.
ஐசிஐசிஐ-யின் 2,000மாவது கிளையை மும்பையில் இன்று திறந்துவைத்த சந்தா கோச்சார் இத்தகவலை வெளியிட்டார்.
2,000 கிளைகளைக் கொண்டுள்ள முதல் தனியார் வங்கி என்ற பெருமையை ஐசிஐசிஐ பெற்றுள்ளது என்று கூறிய சந்தா கோச்சார், தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், போனசும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் மேலும் பல கிளைகளும் தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களும் திறக்கப்படும் என்றும் சந்தா கூறியுள்ளார்.