மருத்துவத் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கான 'Catch 2009' என்ற வேலை வழிகாட்டிக் கண்காட்சியை அடுத்த மாதம் (மே) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இந்தக் கண்காட்சியில் பிரிட்டன், ஆஸ்ட்ரேலியா, நெதர்லாந்து ஆகியவை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்களும் பலக்லைக்கழகங்களும் பங்கேற்று அரங்குகளை அமைக்கவுள்ளனர் என்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கே. மீர் முஸ்தபா ஹூசைன் திருச்சியில் தெரிவித்தார்.
அயல்நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள், திறனை மேம்படுத்துதல், உயர் கல்வி கற்றல் ஆகியவை தொடர்பான வழிகாட்டுதல்களை மாணவர்கள் இந்தக் கண்காட்சியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த செவிலியர்களுக்கு அயல்நாடுகளில் தேவை அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா துவங்கி வைக்கிறார்.