தமிழக அளவில் இரயில்வே துறையில் காலியாக உள்ள முன்பதிவு மைய அலுவலர் மற்றும் சரக்கு அலுவலர் (கிளார்க்) ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 27ஆம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வுகள் மறுதேதி அறிவிப்பின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இரயில்வே துறையில் காலியாக உள்ள முன்பதிவு மைய விசாரணை அலுவலர் மற்றும் சரக்கு அலுவலர் (கிளார்க்) ஆகிய பணியிடங்களுக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள 45 மையங்களில் எழுத்துத் தேர்வுகள் வரும் 27ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த 100 பணியிடங்களுக்கு 40,000 பேர் வரை விண்ணப்பித்துக் காத்திருந்தனர். இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெறும் மறுதேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், இந்தத் தேர்வில் பங்கேற்க இரயில்வே வழங்கியுள்ள இலவச இரயில் பாஸ்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.