Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு

Advertiesment
இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறை கடும் சரிவைச் சந்தித்தது அனைவரும் அறிந்ததே. இந்தச் சரிவு தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு வரை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி பொறியியல் படிப்புகளுக்கு இந்தாண்டு கிராக்கி குறைந்துள்ளது. அதேவேளையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், சிவில், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுபற்றி தமிழகத்தில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஆர்.தேவராஜன் கூறுகையில், ஐ.டி. துறையில் ஏற்பட்ட திடீர் சரிவு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் அத்துறையில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களின் விகிதம் குறைந்துள்ளது என்றார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவி திவ்யா பேசுகையில், சிறந்த கல்லூரியில் சிவில் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர கலந்தாய்வில் முயற்சிப்பேன். இதன் மூலம் நிலையான வருவாய் உள்ள, வேலை உத்தரவாதம் உள்ள நல்ல நிறுவனத்தில் சேர முடியும் என தனது வருங்காலத் திட்டத்தை வெளிப்படுத்தினார்.

வளாகத் தேர்வின் மூலம் மாணவர்களைத் தேர்வு செய்யும் முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் கூட, சர்வதேச அளவில் ஐ.டி. துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக தங்களது பணியாளர் தேர்வை குறைத்துக் கொண்டுள்ளன அல்லது நிறுத்திக் கொண்டுள்ளன. ஐ.டி. துறையில் மீதான மாணவர்களின் ஆர்வம் இந்த ஆண்டு குறைந்துள்ளதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களது இறுதியாண்டு படிப்பை துவக்கும் காலத்திலேயே (ஜூன்-ஜூலை) வளாகத் தேர்வு மூலம் ஐ.டி. நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு செய்தன. ஆனால் தற்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இறுதியாண்டின் இறுதி பருவத் தேர்விற்கு முன்பாக (டிசம்பரில்) மாணவர்களைத் தேர்வு செய்ய முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் முதன்மை வேலைவாய்ப்பு அதிகாரி பி.டி.மாறன் இதுபற்றிக் கூறுகையில், ப்ராஜக்ட் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்கள் குறித்த விவரங்களை செப்டம்பர்-அக்டோபர் கால கட்டத்தில் கல்லூரிகளிடம் வழங்க முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கு இந்தாண்டு டிசம்பரில் வளாகத் தேர்வு நடத்தப்படும் என்றார்.

எனினும், பொறியியல் துறையில் சேர விரும்பும் சில மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. தொடர்பான படிப்புகளைத் தேர்வு செய்யவே விரும்புகின்றனர் என்பதும் உண்மை.

இதுபற்றி சில மாணவர்கள் கூறுகையில், தற்போது பொருளாதார மந்தநிலை காரணமாக ஐ.டி.துறை வீழ்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால், இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் மீண்டும் ஐ.டி. துறை வளர்ச்சியடையும். அப்போது ஐ.டி. வல்லுனர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் எங்களுக்கும் பொற்காலம் காத்திருக்கும் எனக் கூறுகின்றனர்.

பொறியியல் படிப்பில் எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும், அதில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டிலும், அலய்நாட்டிலும் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது என்பதே உண்மை. கல்லூரியில் பயிலும் காலத்திலேயே மினி ப்ராஜக்ட்டுகள், சான்றிதழ் படிப்புகளை முடிப்பதுடன், ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்ளும் மாணவர்களுக்கு வளாகத் தேர்வில் மட்டுமின்றி, வேலைவாய்ப்பு முகாகம்களிலும் தனி மரியாதை கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil