இங்கிலாந்தில் உள்ள தங்கள் நிறுவனத்தின் கிளைக்கு பணியாளர்கள் மாற்றம் மூலம் வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களால் தங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு கவலை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் பணியாற்ற வரும் ஐரோப்பியர் அல்லாத இதர நாட்டு பணியாளர்களுக்கு ஒரு அளவை நிர்ணயித்து, அவர்களின் வருகையை - விசா வழங்கல் மூலம் கட்டுப்படுத்தி வருகிறது இங்கிலாந்து அரசு.
ஆனால், இந்தியாவை வேறாகக் கொண்ட ஒரு நிறுவனம், இங்கிலாந்தில் தனது கிளையை நடத்திவருகையில், இந்தியாவில் இருந்து பணியிட மாற்றம் மூலம் பல பணியாளர்களை இங்கிலாந்து கிளை நிறுவனத்தில் பணிக்குக் கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட பணியிட மாற்றம் (Inter-Company Transfer - ICT) மூலம் இங்கிலாந்தில் வந்து பணியாற்றிவரும் தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்றும், இவர்களை இங்கிலாந்து நாட்டின் குடியேற்றத் துறையால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் (House of Commons) பொதுக் கணக்குக் குழு கவலை தெரிவித்துள்ளது.
“இப்படி நிறுவன இட மாற்றல் மூலம் பத்தாயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கிலாந்திற்குள் வந்து பணியாற்றுகின்றனர். இவர்களால் இங்கிலாந்திலுள்ள திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது” என்று இக்குழுவின் தலைவர் மார்கரெட் ஹாட்ஜ் கூறியுள்ளார்.
இப்படி நிறுவனத்திற்கு செய்யும் இட மாற்றம் மூலம் பணியாளர்களைக் கொண்டு வந்து நிரப்புவதில் டாடா கன்சல்டன்சி முதலிடத்தில் உள்ளது. காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், விப்ரோ டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் நிறுவனமான ஸ்டீரியா ஆகியன அப்படியலில் உள்ளன.
இவர்களை தடுத்த நிறுத்த முடியாமல் யு.கே. பார்டர் ஏஜென்சி திணறுகிறது என்று பொதுக் கணக்குக் குழு கூறுகிறது.