தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பப் போவதாக அறிவித்திருந்தது. அதற்கு இப்போது நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுபற்றி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில். “தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 1,819 கிராம சுகாதார செவிலியர்கள் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிக்கான கல்வித் தகுதியாக "மல்டி பர்பஸ் ஹெல்த் ஒர்க்கர்' அல்லது "மிட்வைப்ரி டிப்ளமோ' அல்லது "ஹெல்த் விசிட்டர்ஸ்' அல்லது "ஏ.எல்.என். டிப்ளமோ' இவற்றில் ஏதேனும் ஒரு கல்வித் தகுதியைப் பெற்றிருப்பதுடன், அந்தக் கல்வித் தகுதி தமிழக அரசின் மருத்துவப் பணிகள் இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பணியிடத்துக்கான வயது வரம்பு 1-7-2015 தேதியில் குறைந்தபட்சம் 18-ம், அதிகபட்சம் 40-க்குள்ளும் இருக்க வேண்டும். இந்தக் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளதால், தகுதியுள்ள பதிவுதாரர்கள் தங்களது கல்வித் தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் வருகிற 15-ஆம் தேதிக்குள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.