தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 547 மருத்துவர்கள் நேரடி நேர்காணலில் தாற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான அறிவிப்பு தமிழ் நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, தடய அறிவியல் மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நலம், குழந்தைகள் அறுவைச் சிகச்சை, உளவியல், நரம்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, ரத்தநாள அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, இருதயவியல், இருதய அறுவைச் சிகிச்சை, கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 34 துறைகளுக்கு 547 மருத்துவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான அறிவிப்பு, விண்ணப்பங்கள் www.mrb.tn.gov.in என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
இணையதளம் வழியாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும் மருத்துவப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.