+2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணாக்கர்களுக்கான உடனடி தேர்வுக்கு வரும் 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில், இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் ஜுன், ஜுலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு எழுதலாம். இந்த தேர்வுகள் ஜுன் மாதம் 22-ந்தேதி முதல் ஜுலை 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் 18-ந் தேதி முதல் 22-ந்தேதி வரை வழங்கப்படும். பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் தங்கள் பள்ளி மூலமாக விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து பள்ளியிலேயே நேரில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 22-ந் தேதி ஆகும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வு எழுதிய தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும் ஜுன், ஜுலையில் நடைபெற உள்ள சிறப்பு துணைத்தேர்வில் கலந்துகொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ வருகிற 27-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வசந்தி ஜீவானந்தம் கூறினார்.