Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யு.எஸ்.- இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விருப்பம்: ஆய்வு

யு.எஸ்.- இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விருப்பம்: ஆய்வு
, செவ்வாய், 8 மார்ச் 2011 (19:45 IST)
அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பு, ஆய்வுப் பட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இந்திய மாணவர்களில் 8 விழுக்காட்டினர் மட்டுமே அந்நாட்டில் பணி வாய்ப்பை பெற்று நிரந்தரமாக தங்கியிருக்க விரும்புகின்றனர் என்றும், பெரும்பாலானவர்கள் இந்தியா திரும்பவே விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

பென்சில்வனியாவில் உள்ள ரட்கர்ஸ் பல்கலையின் மேலாண்மை மற்றும் உழைப்பாளர் பள்ளியின் ஆய்வாளர்களும், டாடா சமூக அறிவியல் கழகமும் இணைந்து அமெரிக்காவில் உயர் கல்வி பயிலும் 1,000 இந்திய மாணவர்களிடையே இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

இவர்களில் பலரும் பட்ட மேற்படிப்பை முடித்தவர்களாகவும், ஆய்வுல் ஈடுபட்டுள்ளவர்களாகவும் உள்ளனர்.
இந்த ஆய்வில் விடையளித்துள்ள 53 விழுக்காடு மாணவர்கள், தங்களுடைய படிப்பை முடித்த பிறகு ஓரிரு ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை பார்த்த பின் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

21 விழுக்காடு மாணவர்கள் தாங்கள் இந்தியாவிற்கு திரும்ப ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவோ அல்லது திரும்பப் போவதாகவோ கூறியுள்ளனர். 16 விழுக்காட்டினர் தாங்கள் இந்தியாவிலோ அல்லது அமெரிக்கா உட்பட வேறு எந்த நாட்டிலோ பணி வாய்ப்பு கிடைத்தால் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள்.

8 விழுக்காட்டினர் மட்டுமே அமெரிக்காவிலேயே பணி வாய்ப்பை பெற்று, அங்கேயே வாழ்ந்திட விரும்புவதாகக் கூறியுள்ளனர். 2 விழுக்காட்டினர் ஏதும் கூறவில்லை.

இந்தியா ஒரு பொருளாதார சக்தியாக வளர்ந்து வருவதையே மாணவர்களின் பதில் காட்டுகிறது என்றும், தங்களுக்கு உரிய பணி வாய்ப்பை அளிக்கக் கூடிய நிறுவனங்கள் இந்தியாவிலேயே அதிகம் உள்ளதாக அவர்கள் கருதுவதாகவும் ஆய்வு கூறுகிறது.

அயல நாடுகளில் படித்துவிட்டு அங்கேயே இருக்க முடிவெடுக்கும் நிலை, அதாவது மூளை வெளியேற்றம் என்று குறிப்பிடப்பட்ட நிலை இன்று மாறிவிட்டதையே மாணவர்களின் பதில் காட்டுகிறது என்று கூறியுள்ள பொருளாதார நிபுணர்கள், உலகப் பொருளாதார சக்தி மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி (ஆசியா) மாறியுள்ளதையே மாணவர்கள் விருப்பம் காட்டுகிறது என்று கூறியுள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட ரட்கர் பல்கலையின் தலைவர் டேவிட் ஃபைன்கோல்ட், அமெரிக்காவில் இருப்பதற்கே பெரும்பான்மை இந்திய மாணவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்தோம், ஆனால் அவர்களின் எண்ணம் பெருமளவு மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு திரும்ப விரும்பாத மாணவர்களின் பலரின் காரணம், தங்கள் தாய் நாட்டில் நிலவும் ஊழலும், எதையும் செய்து முடிக்க ஆகும் கால விரயமுமே (ரெட் டேபிசம்) என்று கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil