மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆண்டு வேலை உரிம கட்டணத்தை இரட்டிப்பாக்கியதால், தமிழகத்தை சேர்ந்த 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவே மலேசியாவில் ஆயிரக்கணக்கான உணவு விடுதிகள் உள்ளன. இந்திய, சைனீஸ், மேற்கத்திய உணவுகள் சமைப்பதில் தமிழக தொழிலாளர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளதால், இந்த ஓட்டல்களில் ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இதுதவிர தோட்ட வேலை, தொழிற்சாலைகளில் தமிழகத்தை சேர்ந்த 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மலேசியாவையும் விட்டுவைக்கவில்லை. அதனால், உள்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. இப்போது மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் ஆண்டுதோறும் வேலை உரிமை கட்டணத்தை புதுப்பிப்பதற்கு 1,800 மலேசிய வெள்ளியும், தங்குமிட கட்டணமாக 200 வெள்ளியும் அரசுக்கு கட்ட வேண்டும்.
இந்நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை புதுப்பிப்பு கட்டணமாக ஆண்டுக்கு 3,600 வெள்ளியும், தங்குமிடத்துக்கு 400 வெள்ளியும் செலுத்த வேண்டும் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தமிழக தொழிலாளர்கள் தலைகளில் பேரிடியாக இறங்கி உள்ளது. அவர்களுக்கு குறைந்த பட்சமாக 600 வெள்ளியில் இருந்து அதிகபட்சமாக 1,500 வெள்ளி வரை ஊதியம் கிடைக்கிறது. தமிழகத்தில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் ரூ.1 லட்சம் வரை செலவழித்து அங்கு செல்கின்றனர்.
இப்போது வேலை உரிம கட்டணத்தை இரட்டிப்பு ஆக்கியதால் ஆண்டுக்கு 4,000 வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ.55,000) செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அவ்வளவு பணத்தை செலுத்த முடியாத தமிழக தொழிலாளர் 2 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் வேலை வாய்ப்பு உரிம கட்டணம் இரட்டிப்பாகிறது. இதனால தமிழக தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்து நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.