மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. ஏராளமான மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1,483 இடங்கள் உள்ளன. இதுதவிர 4 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீட்டு இடங்கள் 261 உள்ளன.
பல் மருத்துவ படிப்பிற்கு அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 இடங்களும், 17 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 847 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. மொத்தத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு 1,744 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், பல் மருத்துவ படிப்பிற்கு 932 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.
எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புகளில் சேர சென்னை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் நேற்று காலை 10 மணிக்கு கல்லூரி தலைவர் மருத்துவர் வி.கனகசபாபதி மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை கொடுத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான சாதி சான்றிதழ் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பம் பெறும் இடத்திலேயே ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டார். அவர் இலவசமாக அனைவருக்கும் அத்தாட்சி வழங்கினார்.
இதேபோல் சென்னையில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரியிலும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரியிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்கிச் சென்றனர்.
வரும் 17ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்தாண்டு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு 18 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மென்பொருள் துறை சற்று வீழ்ச்சி அடைந்ததால் பொறியியல் பிரிவில் படிப்பதைவிட மருத்துவப் பிரிவை தேர்வு செய்ய அதிக மாணவர்கள் முன்வரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்கள் ஏமாற்றம்: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று விண்ணப்பம் வாங்க ஏராளமான மாணவர்கள் குவிந்தனர். ஆனால் விண்ணப்பங்கள் தேவையான அளவு இல்லை.
இதன் காரணமாக ஏராளமான மாணவர்களுக்கு விண்ணப்பம் கிடைக்கவில்லை. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல வெளியூர்களில் இருந்து வந்த மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.