தற்போது பாரத தேசம் "கார்ப்பரேட் இந்தியா" வாகி வருவதால் எல்லாவற்றையும் சரிபார்ப்பது, செக் செய்வது என்பதற்கெல்லாம் ஏஜெண்ட்கள் உருவாகிவிட்டனர். ஆகவே பயோ-டேட்டாவை ஊதிப்பெருக்கி, இல்லாததை இருப்பதாகக் கூறும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.
ஒரு முன்னணி "கன்சல்டன்சி" நிறுவனத்தின் சி.இ.ஓ. இது பற்றி எச்சரிக்கையில் பயோடேட்டாவில் அதிகப்படியாக தனது தகுதிகளையோ அல்லது முன்னால் வாங்கிய சம்பளத்தையோ, தான் வகித்த பொறுப்புகளையோ ஊதிப்பெருக்கிவருவதைக் கண்டுபிடிப்பது தற்போது அதிகரித்துள்ளது. என்கிறார்.
2005ஆம் ஆண்டிற்குப் பிறகே, ஒரு நபர் பயோ-டேட்டாவை ஒரு நிறுவனத்திற்கு அனுப்புகிறார் என்றால் அந்த நிறுவனம் ஏற்கனவே இதற்காகவென்று நியமித்த ஏஜெண்ட்கள் அந்த நபர் பற்றிய உண்மை விவரங்களை அந்த நிறுவனத்திடம் கொண்டு வந்து கொட்டி விடுவது ஒரு வழக்கமான செயலாகவே மாறிவந்துள்ளது.
இதனை முதன் முதலில் துவங்கியவர்கள் பன்னாட்டு நிறுவனங்களே. அதன் பிறகு அந்தப் பாதையை பல இந்திய நிறுவனங்களும் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டன.
அதாவது ஒருவர் தான் வேலையிலிருந்த நாட்களையோ அல்லது இடைவேளியைப் பற்றியோ பொய் கூறுவதை நீக்கிவிட்டாலும் கூட எந்த ஒரு பயோ-டேட்டாவும் 50 அல்லது 60% பொய்மையுடையதாக இருக்கிறது என்பதே ஏஜெண்ட்கள் தரும் தகவலாகும்.
பொதுவாக, வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம், பார்க்கும் வேலையின் தன்மை, பொறுப்புகள் குறித்து ஊதிப்பெருக்கம் இருப்பது வழக்கம். ஒரு சிலர் வயது, முகவரி, பெயர் போன்றவற்றிலும் கூட பொய் கூறுகின்றனர் ஆனால் இது பெருமளவு குறைந்து விட்டது என்கின்றனர் ஏஜென்ட்கள்.
சாதாரண நுகர்வோர் பொருட்கள் விற்பனை அல்லது உற்பத்தி நிறுவனங்களிடையே இந்த விஷயத்தில் ஒற்றுமை இருப்பதால் எஃப்.எம்.சி.ஜி. துறையில் பொய்மை அதிகம் நிகழ்வதில்லை ஆனால் ஐ.டி. துறையில் பயோ-டேட்டாவை ஊதிப்பெருக்குவது என்பது சர்வ சகஜமாக இருந்து வரும் நடைமுறையாகும்.
ஐ.டி. துறையில் ஒருவர் தனது திறன்களை தொழில்நுட்பத் துறையில் அதிகப்படியாகக் காட்டுவது என்பது மிகவும் சகஜமாக இருந்து வரும் ஒன்று.
ஒரு நிறுவனம் தனக்கு எந்த மாதிரியான விற்பன்னர்கள் தேவை என்று கூறுகிறதோ அந்த துறையில் தனக்கு அதிக அனுபவம் என்றோ அல்லது இவ்வளவு புராஜெட்களை கையாண்டுள்ளேன் என்றோ ஊதிப்பெருக்கம் செய்யப்படுவதுண்டு. மேலாளர் பொறுப்பிற்கு ரெஸ்யூம் அனுப்பும் ஒருவர் தனது பொறுப்புகளை அதிகப்படுத்திக் காட்டுவதும் வழக்கம்.
குறிப்பாக மூத்த விண்ணப்பதாரர்கள் அதிகம் தங்கள் பயோடேட்டாவில் குளறுபடிகளைச் செய்வதாகக் கூறப்படுகிறது. தங்களது கல்வி குறித்த பொய் விவரங்கள் பழைய அனுபவத்தின் தேதிகளைக் குழப்புவது ஆகியவற்றைச் செய்கின்றனர். ஏனெனில் இவை சுலபமாக சரிபார்க்க முடியாதது.
ஆனால் இப்போதெல்லாம் இவற்றை செய்ய முடியாது. ஏனெனில் ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களுமே பின்னணி விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே உங்களுக்கு பணி நியமனக் கடிதம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்த பிறகும் கூட ஒருநாள் உங்களை அழைத்து 'தம்பி உங்கள் பின்னணி இப்படியிருக்கிறது வீட்டுக்கு செல்கிறீர்களா? என்று செய்ய முடியும்.
பொதுவாக முன்னால் வேலைபார்த்த நிறுவனங்களிடம் ஒருவரது திறன், அடையாளம், கிரிமினல் தொடர்புகள் போன்றவற்றையும் தற்போது நிறுவனங்கள் ஏஜெண்டுகள் மூலம் வசூலிக்கத் தொடங்கிவிட்டன.
ஒரு விண்ணப்பதாரர் படித்த பள்ளியையும் இந்த ஏஜெண்ட்கள் விட்டுவைப்பதில்லை என்பதே இப்போதைய நிலவரம்.
உதாரணமாக நீங்கள் முந்தைய நிறுவனத்தில் ஆண்டு சம்பளம் 3,60,000 வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் பயோ-டேட்டாவில் அதனை 3,75,000 என்று குறிப்பிட்டால் அது விசாரணைக்கு வரும்போது பதில் கூறியாகவேன்டும். ஆனால் நீங்கள் 3,60,000 என்பதை ரூ.6 லட்சம் என்று குறிப்பிட்டிருதால் அந்த சிவி எதிர்மறை சிவியாக நிராகரிக்கப்படும்.
நிறுவனத்தில் ஏற்கனவே பணியில் சேர்ந்தாகிவிட்டதென்றால் ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவேன்டும் பிறகு அவமானகரமாக வெளியேறவேண்டும்.
எனவே பொய் விவரங்களை அளித்து அதிக சம்பளத்தில் சேர்ந்து விட்டு பயத்துடன் வாழ்வதை விட, நேர்மையாக என்னவுண்டோ அதனைக் கூறி, அதற்கு என்ன ஊதியமோ அதனை வாங்கிக் கொண்டு பயமற்ற வாழ்க்கையை நடத்தலாமே!