வேலை வாய்ப்புடன் வந்து குடியேறும் ஐரோப்பியர் அல்லாத பணியாளர்களின் 25 விழுக்காடு அளவிற்குக் கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசுக்கு அந்நாட்டு குடியேற்ற ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
2011ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஓராண்டுக் காலத்தில் இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் உள்ள நாடுகளில் இருந்து வேலை வாய்ப்புடன் இங்கிலாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை 6,300 முதல் 12.600 வரை குறைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசிற்கு குடியேற்ற ஆலோசனைக் குழு (Migration Advisory Committee) பரிந்துரை செய்துள்ளது. பொதுவாக குடியேற்ற ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை எவ்வித மாற்றமும் இன்றி இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் என்பதால் இது நிச்சயம் நடைமுறைக்கு வரும என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை வாய்ப்புடன் இங்கிலாந்தில் குடியேறும் முதல் நிலை, இரண்டாம் நிலை படணி வாய்ப்புகளைப் பெற்று வரும் குடியேறிகளில் மிகப் பெரும்பாலோர் இந்தியர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் அவர்களே வேலை வாய்ப்புகளுடன் வந்து குடியேறுகின்றனர் என்றும் குடியேற்ற ஆலோசனைக் குழு கூறியுள்ளது.
குடியேற்ற ஆலோசனைக் குழுவின் இந்தப் பரிந்துரையை அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளுடன் நெறிஞர்கள் கிடைக்காத காரணத்தினால்தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்வதாகவும், அது தடுக்கப்பட்டால் தங்களது தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் தொழில் நிறுவனங்கள் கூறியுள்ளன.
இங்கிலாந்திற்கு வந்து குடியேறுவோரின் எண்ணிக்கையை பல பத்தாயிரக்கணக்கில் குறைப்பேன் என்று உறுதியுடனேயே பிரதமராக தேர்வாகியுள்ள டேவிட் கேமரூன், எதிர்ப்பையும் தாண்டி இந்தியர்களின் குடியேற்ற எண்ணிக்கையை குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.