Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தாண்டு முதல் ஒரே நாளில் பி.எட். தேர்வு முடிவு

Advertiesment
இந்தாண்டு முதல் ஒரே நாளில் பி.எட். தேர்வு முடிவு
சென்னை , வெள்ளி, 29 மே 2009 (15:40 IST)
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் ஏற்படும் வேறுபாட்டை நீக்கும் வகையில் இந்தாண்டு முதல் ஒரே நாளில் பி.எட். தேர்வு முடிவை வெளியிட தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருவதால் பி.எட். பதிவுமூப்பு மிகவும் முக்கியத்துவம் அடைந்துள்ளது.

பி.எட். படிப்பில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் அனைத்தும் ஒற்றைச்சாளர முறையில் நேர்காணல் மூலம் ஒரே நேரத்தில் நிரப்பப்பட்டாலும் தேர்வு முடிவு வெளியிடுவது கல்லூரிக்கு கல்லூரி வேறுபட்டு வருகிறது.

ஒரு கல்லூரி தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட்டுவிடும். இன்னொரு கல்லூரியில் தேர்வு தாமதமாக வெளியிடப்படலாம். இதனால் ஒரு கல்வியாண்டில் சேர்ந்த மாணவ, மாணவிகளின் பதிவுமூப்பில் வேறுபாடு ஏற்படுகிறது.

தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிடும் கல்லூரிகளில் படித்தவர்கள் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பி.எட். தகுதியை பதிவு செய்து பதிவுமூப்பு பெற்றுவிடுவார்கள். இதனால், தேர்வு முடிவு தாமதமாக வெளியாகும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், ஒரே கல்வியாண்டில் படித்து முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பதிவுமூப்பில் வேறுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் பி.எட். தேர்வு முடிவை ஒரேநாளில் வெளியிட தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இந்த ஆண்டில் இருந்து புதிய முறையை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, பி.எட். படிப்புக்கான அனைத்து தேர்வுகளும் தமிழகம் முழுவதும் ஒரேநேரத்தில் நடத்தப்படும். இதேபோல் தேர்வு முடிவும் ஒரேநாளில் வெளியாகும்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.ஆர்.வீரமணி கூறுகையில், 2008-09ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எட். தேர்வுகள் 27ஆம் தேதி தொடங்கி உள்ளன. தமிழகம் முழுவதும் 555 கல்லூரிகளில் இருந்து 56 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஜூன் 10ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டில் இருந்து தேர்வு முடிவு ஒரேநாளில் வெளியிடப்படும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil