இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டவர்களுக்கு வேலை அளிப்பதை குறைக்க பிரிட்டிஷ் அரசின் குடியேற்றத் துறை விதித்துள்ள தடையின் காரணமாக அந்நாட்டு நிறுவனங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
ஆண்டொன்றிற்கு ஐரோப்பியர் அல்லாத 21,700 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்புகள் தர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. இந்த வரம்பு வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டவர்கள் அதிகமாக குடியேறுவதைத் தடுக்கவும், அவர்களால் பிரிட்டிஷ் குடிமக்கள் இழக்கும் வேலை வாய்ப்பை தடுக்கவும் இந்த வரம்பை டேவிட் கேமரூன் அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படியே விசா வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் அரசின் இந்தத் தடை தங்கள் தொழில், நிர்வாகத்தை பெருமளவு பாதிக்கிறது என்று பிரிட்டிஷ் நிறுவனங்கள் கூறுகின்றன. இலண்டில் இயங்கும் சார்ட்டர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் பர்சனல் அண்ட் டெவலப்மெண்ட் என்ற அமைப்பு ஒரு ஆய்வு இந்தத் தடையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்தது.
இங்கிலாந்தில் வேலை வாய்ப்பு அதிகரித்து வந்தாலும், அயல் நாடுகளில் இருந்து, குறிப்பாக ஆசிய நாடுகளில் இருந்து வரும் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பிரிட்டிஷ் அரசு விதித்த தடையால் அந்நாட்டின் 17 விழுக்காடு நிறுவனங்கள் திறன் பணியாளர்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், அதில் பிரிட்டிஷ் அரசு அமைப்பான தேச நல சேவையும் ஒன்று என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
பிரிட்டிஷ் அரசின் தடையால், தங்களுக்கு தேவைப்படும் திறன் பணியாளர்கள் கிடைக்காமல் அல்லல் படுவதாக 759 வேலை வாய்ப்பு நிறுவனங்களில் 43 விழுக்காடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பா அல்லாத நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களையே 23% பொறியியல் பணிகளுக்கும், 15 விழுக்காடு தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கும், 7 விழுக்காடு செவிலியர், கணக்காளர் பணிகளுக்கும் தாங்கள் நியமித்து வருவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
“பிரிட்டிஷ் அரசு விதித்துள்ள தடை திறன் பணியாளர்கள் நியமனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ள பொது கொள்கை ஆலோசகர் கெர்வின் டேவிஸ், இன்றைக்கும் திறன் பணியாளர்கள் தேவையில் இங்கிலாந்து பின் தங்கியே உள்ளது என்பதை அரசு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் அரசின் புதிய குடியேற்றக் கொள்கை நிறவனங்களின் பணியையும், அவைகளின் உற்பத்தித் திறனையும் பெருமளவு பாதிக்கும் என்றும் டேவிஸ் கூறியுள்ளார்.