தேனி மாவட்டம் போடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திமுகவை விமர்சித்தார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 505 வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என திமுக தெரிவித்தது. ஆனால் தற்போது வரை பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் எனது முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்காகதான் இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது வீட்டில் இருந்து கொண்டு கையெழுத்து போட்டு வருகிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கு கூட வராமல் காணொளி மூலம் பிரசாரம் செய்கிறார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வழிமுறை அவருக்கு தெரியவில்லை. 10 மாத கால திமுக ஆட்சியில் ஒரு முன்னேற்றம் கூட தமிழகத்தில் ஏற்படவில்லை என திமுகவை விமர்சித்தார்.