பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள 31,210 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியல் கலந்தாய்வு கடந்த ஜூலை 10ஆம் தேதி துவங்கி இம்மாதம் 10ஆம் தேதி நிறைவடைந்தது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 1,18,749 மாணவர்களில், 39,657 பேர் வரவில்லை.
மேலும் கலந்தாய்வுக்கு வந்த 421 மாணவர்கள் தங்களுக்கு பொறியியல் இடம் வேண்டாம் எனக் கூறிவிட்டனர். இதுதவிர 7 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டு விட்டன. முடிவில் 78,664 மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கான இடம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, தமிழக பொறியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,09,829 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இதுவரை 78,664 மாணவர்களே சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்தாண்டு 75,092 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 440 பொறியியல் கல்லூரிகளில், 26 கல்லூரிகளில் மட்டுமே 100% மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
இவற்றில் 24 கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அல்லது அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளாகும். மேலும் 32 கல்லூரிகளில் 20% குறைவான அளவு இடங்களே நிரம்பியுள்ளன என்றார்.