கல்விக்கடன் கொடுக்க மறுத்த வங்கியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கல்விக்கடன் கொடுக்க மறுத்த 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வங்கியை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் உள்ள வங்கி முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.'
யூனியன் பேங்க் ஆப் இந்தியா' கிளையின் மேலாளர், கல்விக்கடன் கேட்டு வரும் பெற்றோர்களையும், மாணவ, மாணவிகளையும் அவமானப்படுத்தியும், இன்சூரன்ஸ் போட்டால்தான் கல்விக்கடன் கொடுப்பேன் என்றும் வலியுறுத்தி வருகிறார்.கல்விக்கடன் ரூ.4 லட்சம் வரை எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்க வேண்டுமென்று அரசு கூறியுள்ள நிலையில் அரசின் உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் வங்கி மேலாளரின் நடவடிக்கைகளை கண்டித்தும், மாணவ, மாணவிகளுக்கு நிபந்தனையற்ற கல்விக்கடன் வழங்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வங்கியின் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மல்லை ஒன்றிய தலைவர் வி.சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் எஸ்.சுரேஷ் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு.யை சேர்ந்த கே.பூபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் பி.சுரேஷ், வழக்கறிஞர் எஸ்.சேகரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செங்கோடன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ந.வேலுச்சாமி நிறைவுரை ஆற்றினார். சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் ஆர்.ரமேஷ் நன்றி கூறினார்.