தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் தொடரும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பெண்களுக்கு தனி எழுத்தறிவு இயக்கம் தொடங்குவதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குத்துவிளக்கு ஏற்றி மாநில பெண்கள் எழுத்தறிவு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், மாநில பெண்கள் எழுத்தறிவு இயக்கத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தருமபுரி மாவட்டத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. படிப்படியாக மாநிலம் முழுவதும் கொண்டு வரப்படும்.
கல்வி அறிவில் ஆண்களும், பெண்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆண்களுக்கு கல்வி அவசியம்தான். ஆனால் பெண்கள் கல்வி கற்றால் அந்த குடும்பம் மட்டுமல்ல அவரை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவர். பெண்களுக்கான விடுதலை போராட்டம் பற்றிய தகவல்களை பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, தமிழகத்தில் வழக்கம் போல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தங்கம் தென்னரசு பதிலளித்தார்.