கனடா நாட்டில் முதுநிலை, ஆய்வு கல்வி பயில நிதியாதரவுடனான கல்வித் திட்டத்தின் கீழ், இள நிலை பட்டப்படிப்புகளில் தலைசிறந்து விளங்கிய 51 இந்திய மாணவர்களுக்கு கனடா நாட்டுப் பல்கலைகளுக்கு சென்று படிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
குளோபலிங்க் கனடா - இந்திய கிராஜூவேட் ஃபெல்லோஷிப் திட்டத்தின் கீழ் 51 இந்திய மாணவர்கள் தங்கள் முதுநிலை பட்டப்படிப்பை, ஆய்வை (பிஎச்டி) கனடா பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள 3.5 மில்லியன் கனடா டாலர் நிதியாதரவு அளிக்கப்படும் என்று மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மிட்டாக்ஸ் (Mathematics of Information Technology and Complex Systems) குளோபலிங்க் 2010 இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தை டெல்லியில் செய்தியாளர்களிடம் மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் விளக்கியுள்ளார்.
இக்கல்வித் திட்டம் குறித்த அறிவிப்பை பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலையின் துணை வேந்தர் ஸ்டீபன் ஜே. டூப்பே, கனடா அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கேரி குட்யியர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.