பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் 29% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஒரு பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என சில கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான உடனடித் தேர்வை மொத்தம் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 865 பேர் எழுதினர். இதில் 29% (35,426 மாணவர்கள்) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், “மூன்று பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டும் அந்தப் பாடங்களை படித்துத் தேர்வு எழுதுவது அவர்களுக்கு கடினமானதாக இருக்கிறது. இதன் காரணமாகவே ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்வெழுதும் மாணவர்களில் அதிகம் பேர் மீண்டும் தோல்வி அடைகின்றனர்.
எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மட்டும் உடனடித் தேர்வு நடத்தினால், மாணவர்களின் பணம் வீணடிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், தேர்வுத் துறையின் பணிச்சுமையும் குறையும் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சில பெற்றோரிடம் பேசியதில், 3 பாடத்தில் தோல்வியடைந்தவர்கள் உடனடித் தேர்வில் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டால், பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
இந்த ஆண்டு 3 பாடங்களில் தோல்வியடைந்து, உடனடித் தேர்வு எழுதியவர்களில் 6.5% (1,601) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இவர்கள் காலதாமதமின்றி மேல்படிப்பை தொடரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே, 3 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பதிலாக ஒரு பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தினால் போதும் என்ற கல்வித்துறை அதிகாரிகள் சிலரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என திட்டவட்டகாகக் கூறினர்.
10ஆம் வகுப்பு உடனடித் தேர்வை, 3 பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் எழுதலாம் என்ற தற்போதைய நடைமுறையை தொடரலாமா? உங்கள் கருத்து என்ன?