மத்திய கல்வி வாரியப் (CBSE) பாடத் திட்டம் கொண்ட பள்ளிகளில், மாணவர்கள் விரும்பினால் மட்டும் SSLC பொதுத்தேர்வு எழுதும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான திட்ட வரைவை மத்திய கல்வி வாரியம் (CBSE) விரைவில் மத்திய அரசிடம் வழங்க உள்ளதாக CBSE அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய CBSE அதிகாரி ஒருவர், CBSE பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளில் SSLC பொதுத்தேர்வை மாணவர்கள் விரும்பினால் மட்டும் எழுதவும், ரேங்க் முறைக்கு பதிலாக கிரேடு (grade) முறையை அமல்படுத்தும் திட்டம், கடந்த 2005ஆம் ஆண்டு முதலே அரசுக்கு இருந்து வந்தது.
ஆனால் மாநில அரசு பாடத்திட்டங்களை கொண்ட பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத காரணத்தால், இத்திட்டத்தை CBSE பள்ளிகளில் மட்டும் அடுத்தாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், SSLC பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி விவாதிப்பதற்காக சென்னை, திருவனந்தபுரம், சண்டிகாரில் நடந்த பயிற்சிப் பட்டறையில், SSLC பொதுத்தேர்வை ரத்து செய்வதன் நன்மை குறித்து அனைவரும் உணர்ந்துள்ளதால் மத்திய மனிதவள மேம்பாட்டு வாரியம் உற்சாகம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து புதுடெல்லியில் இன்று நடைபெறும் மத்திய கல்வி வாரியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் SSLC பொதுத்தேர்வு முறையை ரத்து செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.