பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மத்திய நிறுவனத்தின் (சிப்பெட்) சர்வதேச தரத்திலான உயர் கல்வி மையம் சென்னையில் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி இவ்விழாவில் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து இந்திய பத்திரிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளாஸ்டிக் மற்றும் அது தொடர்பான தொழில்களில் கல்விப் படிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கு ஊக்கமளிப்பது ஆகிய பணிகளை தேசிய அளவில் செயல்பட்டு வரும் 'சிப்பெட்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முனைவர், பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டயப்படிப்புகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்தியாவில் முதன் முதலாக 'சிப்பெட்' நிறுவனம் சென்னையில் 1968ல் துவங்கப்பட்டது. தற்போது இதனுடன் சேர்த்து 15 'சிப்பெட்' நிறுவனங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் தொழில்துறையில், உலக அளவில் இந்நிறுவனத்தின் கல்வி தகுதிக்கு தனி இடம் உண்டு.
'சிப்பெட்'டில் சர்வதேச தரம் வாய்ந்த உயர்நிலை கல்வி நிலையம் அமைத்து, மிக தரமான கல்விப் படிப்புகளை அறிமுகப்படுத்துவதென மத்திய அரசு தீர்மானித்தது. இதனையடுத்து, சென்னையிலுள்ள 'சிப்பெட்' நிறுவனத்தில் நாட்டிலேயே முதல் முறையாக உயர்நிலை கல்வி மையம் அமைக்கப்படவுள்ளது.
இங்கு பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் 4 ஆண்டு முழு நேர பி.டெக். படிப்பு மற்றும் 2 ஆண்டு முழு நேர எம்.டெக். படிப்பு, பிளாஸ்டிக் தொழில்நுட்பம் தொடர்பான சிறப்புப் பிரிவுகளில் 2 ஆண்டு முழு நேர எம்.டெக்., பாலிமர் தொழில்நுட்பத்தில் முனைவர் படிப்பு ஆகியவை துவக்கப்படவுள்ளன. பாலிமெரிக் மெட்டிரியல்ஸ் துறையில் ஆராய்ச்சி பணிகளையும் சிப்பெட்டில் அமைக்கப்படவுள்ள உயர்கல்வி மையம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த கல்விப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக ரூ.20 கோடி செலவில், 1.5 ஏக்கர் நிலத்தில் 'சிப்பெட்' வளாகத்திலேயே கல்வி மையத்திற்காக கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த அடிக்கல் நாட்டு விழா வரும் ஆக்ஸ்ட் 3ம் தேதி நடைபெறுகிறது. மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை செயலர் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.