அரசு கல்லூரிகளில் மருந்தாளுநர், நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ இயக்குனரகத்தில் நடக்கும் இந்த கலந்தாய்வில் வரும் 5ஆம் தேதி நர்சிங் தெரபி படிப்புக்கும், 6ஆம் தேதி ஒருங்கிணைந்த மருந்தாளுநர் படிப்புக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
காலை நடக்கும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகள் 9 மணிக்கும், பிற்பகல் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் மதியம் ஒரு மணிக்கும் வந்துவிட வேண்டும்.
தகுதியானவர்களுக்கு கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் தனித்தனியே தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தகுதி இருந்தும் கடிதம் கிடைக்க பெறாதவர்கள் குறிப்பிட்ட அட்டவணைப்படி கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்விற்கு வரும்போது அனைத்து அசல் கல்விச்சான்றிதழ் மற்றும் உரிய கட்டணத்தை எடுத்துவர வேண்டும். கலந்தாய்வு தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறை (tnhealth.org) இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.