படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்காக பல்கலைக்கழகங்கள் மூலம் சமுதாயக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் (மானாமதுரை, அ.தி.மு.க.), லதா அதியமான் (திருமங்கலம், தி.மு.க.), பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர், காங்கிரஸ்), கமலாம்பாள் (காஞ்சீபுரம், பா.ம.க.), தேன்மொழி (நிலக்கோட்டை, அ.தி.மு.க.) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துப் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் 564 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த என்.சி.ஆர்.டி.க்கு கடிதம் எழுதப்பட்டது. அனுமதி தருவதற்கு பல்கலைக்கழகம் மறுத்தாலும் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி பெற்று கல்லூரியை தொடங்கி விடுகின்றனர். அவற்றை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பலர் படிப்பை தொடர முடியாத சூழலில் உள்ளனர். இந்த நிலமையைப் போக்குவதற்காக பல்கலைக்கழகங்கள் மூலம் சமுதாயக் கல்லூரிகளை தொடங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
நிலக்கோட்டையில் இருக்கும் பெண்கள் கல்லூரியை இருபாலரும் படிக்கும் கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தால் அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.