பெரியவர்களை விட தீபாவளித் திருநாள் அன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். அது இயல்பானதுதான். ஏனெனில் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் உள்ளிட்ட உணவு வகைகள், பெற்றோரின் கணிவு, பள்ளிக்கு விடுமுறை என்று அடுக்கடுக்கான இனிமைகள் அந்த வேளையில் ஒன்றுகூடுவதால் அவர்களின் உற்சாகத்திற்கு அளவில்லாமல் போகிறது.
ஆனால், அந்த நாட்களில் வளர்ந்துவிட்ட நம்மிடமும் ஒரு மகிழ்ச்சி ஊடுருவி நம்மையும் இன்பத்தில் ஆழ்த்துவதை உணரலாம். சிறுவர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை, எனவே அவர்களால் எதையும் முழுமையாக அனுபவித்து களிக்க முடியும். ஆனால், பெரியவர்களுக்கு அப்படியில்லையே. நாட்டுப் பிரச்சனையில் (ஒன்றா, இரண்டா) இருந்து வீட்டுப் பிரச்சனை வரை தீராத பிரச்சனைகள் எப்போதும் இல்லத்தையும், இதயத்தையும் சூழ்ந்திருக்கையில், இந்த ஒரு நாள் கொண்டாட்டம் அவர்களை எப்படி முழுமையான மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது? பலரும் இதனை உணர்ந்திருப்பார்கள். எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அந்த சில நாட்களில் நம்மையும் அறியாமல் நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். அது எப்படி, எதனால்?
நீண்ட காலம் சிந்தித்தும் விடை கிட்டவில்லை. ஸ்ரீ அரவிந்தர், அன்னை ஆகியோரின் எழுத்துக்களை படிக்கும்போது அது புரிந்தது. அவர்கள் இவ்வாறு அதனை விளக்குகிறார்கள்: நம்மைச் சுற்றி எப்போதும் பல்வேறு உணர்வலைகள் வட்டமிடுகின்றன. அது பலரையும் தழுவி - ஒரு ஆற்றில் ஒடும் நீரைப்போல் எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு வந்த நம்மையும் தொடுவதுபோல் - பிறகு நம்மையும் வந்து தழுவுகிறது. அந்த உணர்வலைகளில் உள்ள உணர்ச்சிகள் நம்மை தழுவுகின்றன, தாக்குகின்றன, மகிழ்ச்சியிலோ அல்லது துக்கத்திலோ கூட அமிழ்த்துகின்றன. அதற்கேற்றாற்போல் நம் மன நிலையும் மாறுகிறது என்று கூறியுள்ளனர். இந்த உணர்வலைகளின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களாக யோகிகள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆம், இதைத்தான் நாமும் உணர்கிறோம். தீபாவளி நாட்களிலும் நம்மைச் சுற்றியுள்ள பிரச்சனைகளும், சிக்கல்களும் விலகிவிடுவதில்லை. ஆனால், அவைகளின் தாக்கம் குறைகிறது, ஏனெனில் நமது சிந்தனையில் நமது வீட்டிலுள்ள குழந்தைகளின் சிறுவர்களின், வீட்டுப் பெண்களின், பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்வதில் சிந்தனையைச் செலவிடுகிறோம். அவர்களை மகிழ்விப்பதிலும், அவர்கள் மகிழ்வதைக் கண்டு அதில் மகிழ்ச்சியைத் தேடுவதிலும் கவனைத்தை செலுத்துகிறோம். இது நம் ஒருவரில் மட்டுமே நிகழவில்லை. ஒரு சமூகமாக எல்லா பெரியவர்கள் மத்தியிலும் நிகழ்கிறது. அதே நேரத்தில் மற்றொன்றும் நடக்கிறது. பொதுவாக தொல்லை ஜீவன்களாக கருதப்படும் சிறுவர்களும், குழந்தைகளும், குடும்பத்தினரும் அப்போது நமது மனக் கண்களில் தேவையாகிவிடுகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பே நம்மை முழுமையாக ஆக்கிரமிக்கிறது.
இதன் விளைவு, பொதுவாக நம்மைத் தாக்கும் உணர்வலைகளில் கலந்திருக்கும் கலப்படமான பல்வேறு உணர்ச்சிகள் இந்த பண்டிகை வேளைகளில் இருப்பதில்லை. நாமும் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இல்லை. எனவே, பிள்ளைகளின் அந்த மகிழ்ச்சியே இத்தினங்களில் உணர்வலைகளை நிரப்புகின்றன. அந்த காலத்தில் அடிக்கும் வெயில், பெய்யும் மழை, வீசும் காற்று என அனைத்தும் ஒரு தனித்த தன்மை கொண்டதாக நாம் - நம்மை விட அதிகமாக பிள்ளைகள் உணர்கின்றனர். ‘அந்தச் சூழலே இனிமையானது’ என்று நாம் கூறுகிறோமே அது இந்த உணர்வலையின் இயல்பு காரணமாகவே ஏற்படுகிறது. நாம் உணரும் அந்த இனிமையான சூழல் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக - பொதுவாக வீட்டின் பெரியோர்கள் - அதீத கவனத்துடன் எல்லோரையும் எச்சரிப்பதையும் பார்க்கிறோம். ஏனெனில் அந்த இனிய சூழல் எவ்வித அசம்பாவிதத்தாலும் கெட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு. இதுதான் அவர்களை சிறுவர்களுக்கு இணையாக பரபரப்பாக வைத்துக்கொள்கிறது.
தீபாவளி பண்டிகை நாளை நெருங்கும் நாட்களில் இந்த மகிழ்ச்சி உணர்வு தொடர்ந்து அதிகரிப்பதையும், அந்த நாளில் அதிகாலைப் பொழுதிலேயே அது உச்சத்தை அடைவதையும், தீபாவளிக்கு மறுநாள் முதல் அந்த உணர்வு நிலை கொஞ்சம் கொஞ்மாக மாறுவதையும், சில நாட்களில் பழைய நிலையை அடைவதையும் உணரலாம்.
இன்னும் சற்று ஆழ்ந்து உள்நோக்குவோமானால், நமது இளம் பிராயத்தில் தீபாவளி நாளில் ஒலித்த பாடல் அல்லது நடந்த இனிமையான நிகழ்வு ஆகியன, அதன் பசுமை மாறாமல் நமது நினைவில் நிழலாடுவதையும் உணரலாம். இதற்கு மற்றொரு பக்கமும் உண்டு. அது இப்படிப்பட்ட நாளில் ஏற்படும் மரணம். அது சம்மந்தப்பட்டவர்களை பெரிதும் பாதித்து விடுகிறது. ஊரே கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் அவர்களது வீட்டில் ஏற்பட்ட துக்கம், அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆட்டுவிப்பதைக் காணலாம். அதிலிருந்து விடுபட ஒரு தலைமுறைக் காலம் கூட ஆகிவிடுவதுண்டு.
எனவே, தீபாவளி போன்ற பண்டிகை தினங்களை நமது வாழ்நாளில் திரும்பிப் பார்ப்போமானால், அந்த நாட்களை மகிழ்ச்சியால் நிரப்பிய பெருமையனைத்தும் குழந்தைகளையும், சிறுவர்களையும், வீட்டுப் பெண்களையுமே சார்ந்திருப்பதைக் காணலாம்.
அந்த உன்னத நினைவுகள் இந்த தீபாவளித் திருநாளிலும் உங்கள் இல்லங்களில் மலரட்டும், நாட்டிலும் மலரட்டும்.