காகிதம் சுருட்டி
கரிமருந்து அடைத்து
நரகாசுரன் உடலை
நார் நாராய்க் கிழிக்க,
எங்கள் உடலைக்
கந்தலாக்கிக்கொள்ள நாங்கள் தயார்.
ஆனால்
எங்கள் தடத்தையே கருவறுக்க
இந்தப்
பொருளாதார சன்னலைத் திறந்து வைத்து
வணிக நரகாசுரர்களுக்கு
ராம காவியம் அரங்கேற்றியவர்கள் யார்?
நாங்கள் வெடித்துச் சிதறி கிடக்கிறோம்.
எங்கள் வீட்டுச் சின்னப்பிஞ்சுகள் கூட
அக்கினியைத்தான் சோறாக்கி உண்ணுகின்றனர்.
பத்திக்கு
பசி தீர்க்கும் உணவின் மீது கொண்ட பக்தியில்
ரசாயனம் சுருட்டுவதிலிருந்து
திரியில்
மூலமான எங்கள் கண்ணீரின்
கங்கோத்திரியை வைத்து
ஈரப்படுத்திய வெடிமருந்தைச் சுருட்டும் வரை
உங்கள் தீபாவளியின்
உற்சாகம் கரைபுரளும் காவியத்தைப் பாடும்
ஒரு "கட்டுத்தறியை"
எந்த கம்பன் வீட்டில் நாங்கள் தேடுவது.
வறுமை கட்டிவைத்த ஒரு
சிறையின்
கம்பிக்குள்ளிருந்து
கம்பி மத்தாப்பு ஆக்கி
புன்னகை நீட்டுகின்றோம்.
உங்கள் புன்னகைகள் குவியட்டும்.
நீங்கள்
சிரிப்பதே தீபாவளி.
இதயங்கள் வெடிப்பதே
எங்கள் தீபாவளி.
நரகாசுரன்களை வதம் செய்தது போதும்.
ஒரு
மாற்றத்திற்காகவாவது
இந்த வருடம்
லஞ்சாசுரன்களை வதம் செய்யுங்களேன்.