வரும் ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து ஒரு சந்திர கிரகணமும், ஒரு சூரிய கிரகணமும் நிகழ உள்ளது.
வரும் ஜூலை மாதம் அடுத்தடுத்து 2 கிரகணங்கள் ஏற்பட உள்ளது. இப்படி ஒரே மாதத்தில் 2 கிரகணங்கள் ஏற்படுவது அதிசயமாக கருதப்படுகிறது. ஜூலை 7ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம். இந்த கிரகணத்தை இந்தியாவில் நேரடியாக பார்க்க முடியாது.
அதே நேரத்தில், ஜூலை 22ம் தேதி ஏற்படும் முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். இது, இந்த நூற்றாண்டின் முதல் முழு சூரிய கிரகணம். கடைசியாக கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி இந்தியாவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.
சூரிய உதயத்தின்போது ஏற்படும் கிரகணத்தை வட இந்தியாவில் உள்ளவர்கள் பார்க்கலாம். காலை 6.12 மணிக்கு தொடங்கி 7.19 மணிக்கு முடியும். சூரியனை நிலவு 6 நிமிடம் 39 வினாடிகள் முழுமையாக மறைத்து இருக்கும். நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கிரகணம் முழுதாக தெரியாது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தால் கண் பார்வை பறிபோய்விடும் என்பதால் கோளரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.