Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவே பொதுச் செயலாளர்.. சசிகலாவே முதலமைச்சர்... ஏன்?

Advertiesment
சசிகலாவே பொதுச் செயலாளர்.. சசிகலாவே முதலமைச்சர்... ஏன்?
, வெள்ளி, 16 டிசம்பர் 2016 (13:18 IST)
ஜெயலலிதா என்ற பெண் அரசியல்வாதி இறந்துபோனார். இல்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்கிறார்கள். விசாரணை வேண்டும் என்று கோருகின்றனர். உண்மை வெளிவர வேண்டும் என்கின்றனர்.


 

ஆனால், ஜெவின் மரணத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் கேட்கப் படவேயில்லை. வயது முதிர்ந்த, பல்வேறு நோய்களின் காரணமாக வெளியில் நடமாட முடியாமல் இருந்த தமிழக முதலமைச்சரின் சிகிச்சை - உடல் நல முன்னேற்றம் குறித்து ஏன் வெளிப்படைத் தன்மை இல்லை?

அவரின் உடல் நலன் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய ஜனநாயக கடமையுள்ள சக மந்திரிகளும், தமிழக ஆளுநரும் கடைசி வரை மௌனம் சாதித்தது ஏன்?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, அரசியல் சாசனத்தால் நடத்தப்படும் ஜனநாயகம் குறித்து எவருக்கும் எந்த கவலையும் இல்லை என்பதையே ஜெவின் மருத்துவமனை காலங்களில் நீடித்த இரகசியம் காட்டுகிறது. சென்ற ஆண்டு டிசம்பர் மழை வெள்ளத்தின் போதும் கூட, ஜெ செயல்படவில்லை. அப்போதும் அவர் உடல் நலமின்றி இருந்திருக்கலாம்.

ஆனால், அதனையொட்டி தமிழக அரசே உடல் நலமின்றி படுத்துக்கொண்டது. மரணங்களுக்கும் சொத்துக்கள் அழிவுற்கும் சொல்லொன்னாத் துயரத்திற்கும் மக்கள் ஆளானார்கள். தனியொருவரின் நகர்த்த முடியாத காலின் கீழ் சிக்கிக்கொண்ட நாடாக தமிழ்நாடு மாற்றப்பட்டதை மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.

எம்ஜிஆரின் உண்மையான “புரட்சிகர“ வாரிசு ஜெயாதான். அரசியலற்ற, பிற்போக்கான, செயலற்ற மக்கள் பிரிவினரை அரசியல் கட்சியின் அடித்தளம் ஆக்கினார் எம்ஜிஆர். அந்த அரசியலற்ற பிரிவின் முன்னோடிகளை அரசியலில் மேலே கொண்டுவந்து அந்த கோட்டையை அசைக்க முடியாதது ஆக்கினார் ஜெயலிதா.

இப்படியாக அவர்கள் புரட்சித் தலைவர் / தலைவி ஆனார்கள். வேர்க்கால் மட்டங்களில், கிராமங்களில் அதிமுக அறிவிலிகள் அதிகார மையம் ஆனார்கள். கொள்ளையடித்தனர். மக்கள் முன்னேறாது பார்த்துக்கொண்டனர். அப்படி கிடைத்த ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்நாட்டு - வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் சிறந்த ஆதரவாளராக வளர்ந்தார். இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் சமூக விரோதிகளை தன் பொருளாதார அடித்தளமாக்கிக் கொண்டார். அதன் மூலம் கட்சியின் வருமானத்தைப் பெருக்கியதோடு, தனது செல்வத்தையும் அதிகரித்துக்கொண்டார். அதற்கான தனியொரு கட்டமைப்பை சசிகலாவின் கீழ் கட்டமைத்தார்.

இதற்கெல்லாம், எம்ஜிஆர் கட்டமைத்த கட்சியமைப்பு உதவியாக இருந்தது. ஒரு முறை கூடி, பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் தங்களின் தலையெழுத்தை அவர் கையில் கொடுத்துவிடும் அரை பாசிச - ஜனநாயக அமைப்பாக அக்கட்சியின் அமைப்பு முறை இருக்கிறது. அதனை ஜெ. சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். தனது ஊழலையும் கொள்ளையையும் மறைத்துக்கொள்ள தானே தன்னந்தனி அதிகார மையம் ஆனார்.

அதுதான், அவரின் மரணத்துக்குப் பின்னே உள்ள மர்மத்தின் காரணம். நிச்சயம் இறந்துவிடுவார் என்ற சூழலில், அவர் கட்டி வளர்த்த கொள்ளை நிர்வாகம் / சொத்துகள் / வாரிசு உரிமைகள் போன்ற பிரச்சனைகள் இலகுவாகத் தீர்க்கப்படுவதற்கு ஏற்ப அவரின் “மரணம் சம்பவிக்கும்படி“ பார்த்துக்கொண்டனர்.

அதற்காகவே, மாநில அரசின் நிர்வாகத் தலைவரான முதலமைச்சரின் உடல்நிலை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாது பார்த்துக்கொண்டனர். மரணத்தின் பின்னே, அல்லது மரண அறிவிப்பின் பின்னே அதிகாரம் கைமாறுவது சுலபமாக நடந்துகொண்டிருப்பதே மேற்சொன்னதற்கு ஆதாரம்.

எதிர்காலம்:
========

மேலே சொன்ன போல அசியல் அற்ற மனிதர்களின் அரசியல் கட்சியொன்று, அரை பாசிச முறையிலான அரசியல் தலைமையொன்று ஆட்சியில் நீடிப்பதே, அவர்களை முன்னிறுத்தி தொழில் (தொழிற்சாலைகள் முதல் மணல் அள்ளுவது வரை, காண்ட்ராக்ட் கொள்ளை முதல் கிராமப்புர அதிகாரம் வரை) செய்வோருக்கு தேவையானதாகும். கள்ளப் பணம், திருட்டுச் சொத்து சேர்க்கும் இந்திய முதலாளிகளுக்கு இப்படியொரு கட்சியும் ஆட்சியும் தேவை.

அதனால், அவர்கள் சசிகலாவைத் தேடிச் சென்று துக்கம் விசாரிக்கின்றனர். அவர்களின் அரசியல் புரோக்கர்களும் கார்டனுக்கு அணி வகுக்கின்றனர். ‘உங்களுக்கு அனைத்து ஆதரவும் உண்டு‘ என்று மோடி தலையில் கைவைத்து ஆசிர்வதிக்கிறார். மற்றொரு பக்கம் ரைடுகள் நடத்தி மந்தைகள் சிதறாமல் பார்த்துக்கொள்கிறார்.

இச்சமயத்தில் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஜெயாவின் அஇஅதிமுக கட்சிக்குள் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மையம் இருந்ததில்லை. அது அவரின் தனிப்பட்ட குணம் மட்டுமல்ல, அவர் கட்டியெழுப்பிய திருட்டு சாம்ராஜ்ஜியத்தின் தேவையும் ஆகும். அந்தப் பாரம்பரியம் நீடிக்காவிட்டால் அந்தக் கட்சி நீடிக்க முடியாது.

பிஜேயின் கையாளாக மாறாவிட்டால் திருட்டுச் சொத்து நிலைக்காது. கொள்ளை கும்பலின் அடிநாதமான, இதுவரை சேகாரமான சொத்தைக் காப்பாற்றும் சசியைக் காப்பாற்றாவிட்டால் அனைத்தும் அழிந்துபோகும். கொள்ளை கம்பெனியின் முக்கிய நிர்வாகிகள் அவர்களின் கீழுள்ள சின்ன நிர்வாகிகள் தங்கள் சொத்துக்களைக் காப்பாற்றாவிட்டால் தங்களின் இருத்தலை எதிர்காலக் கொள்ளையக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.

எனவே... சசிகலா பொதுச் செயலாளர் ஆவதும், அவரே முதலமைச்சர் ஆவதும் தவிர்க்க முடியாதவை.

தப்பெண்ணங்கள்:
============

நிலைமை இப்படியிருக்க, பிஜேபியிடமிருந்து திராவிட பாரம்பரியத்தைக் காப்பாற்றுவோம், ஜெ சாவின் மர்மத்தை வெளிக்கொணர்ந்து சசியிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவோம் என்பதெல்லாம் காரிய சாத்தியமற்ற, நல்லறிவுடன் சம்பந்தப்படாத முயற்சிகள்.

திராவிடப் பாரம்பரியத்தின் இறுதிக் கசடான அஇஅதிமுக தலைமை தாங்கி பிரதிநிதித்துவப்படுத்தும் “அரசியலற்றவர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும்“ பிற்போக்கினை முறியடிக்காமல் எவ்வகைப்பட்ட முற்போக்காளர்களின் கனவும் நனவாகாது.

கட்டுரையாளர்: மதிவாணன், சிபிஐ [எம்.எல்] மாவட்ட செயலாளர், மதுரை


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுடனான கடைசி சந்திப்பு - சுப்பிரமணிய சாமி விளக்கம்