சேவை என்பது பணம், பொருள் என எவ்வித கைம்மாறும் பெறாமல், ஒரு நோக்கத்திற்காக அல்லது கொள்கைக்காக தமது உழைப்பினை வழங்குவதே ஆகும். சமூக சேவை என்பது மனித சமுதாயத்தை உணர்ந்துக் கொள்ள உதவும் ஒரு கருவி. மற்றவர்களுக்கு பரிவுடன் உதவி செய்வது ஒரு பொறுப்பல்ல.... கடமை. சேவையைப் பற்றி திருவள்ளுவர் தனது திருக்குறளில் : -
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு
இதன் பொருள் : பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்ப செய்வார் என்று எதிர்ப்பார்த்து செய்வது அன்று.. ஒருவர் செய்வதற்குத் திரும்பச் செய்துதான் ஆக வேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு, இந்த உலகம் என்ன செய்து விட முடியும்.
சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அவதியுற்ற மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஜாதி,இன மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் செய்த உதவிகளே, உண்மையான சேவையாகும். தாயின் அன்பு, தந்தையின் கடமை, குருவின் அறிவுரை போன்றவைகளே சேவை என்று கூற வேண்டும். ஏனென்றால், இவை மட்டும் தான் எந்த பிரதிபலன் பாராமல் செய்யப்படும் செயல்கள். இப்போது இதை சேவை என்று கூற முடியாது, ஏனென்றால், சேவைக்கே வரி விதிக்கும் நாட்டில் நாம் இருக்கின்றோம். எனவே, எதிர்ப்பார்ப்பில்லாமல் செய்யப்படும் எந்த செயல்களும் இனி இலவச சேவை ... இல்லை இல்லை விலையில்லா சேவையாகும்.
மக்களுக்கு தொண்டாற்ற, மக்களுக்கு பணி செய்திட வருபவர்கள், எந்த ஒரு பிரதிபலன் பாராமல் தங்கள் செயல்களை செய்தால் மட்டுமே, மக்களுக்கு சேவை செய்ய வந்தோம் என்று கூறுங்கள். மக்களுக்காக வேலைச் செய்துவிட்டு அதற்கு ஈடாக பல விதமான(!) பலன்களை அனுபவித்துக் கொண்டு, மக்களுக்கு சேவைச் செய்ய வந்தோம் என்று “ சேவை” என்ற வார்த்தையை களங்கப்படுத்த வேண்டாம். மனைவியின் தாலியை விற்று கட்சிக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்ய வந்தோம் என்றும், மக்களுக்காக சேவை செய்ய இந்த கட்சியில் வாய்ப்பளிக்கவில்லை என்று வேறு கட்சிக்கு தாவி, எம்.எல்.ஏ சீட்டுக்காக அலையும் இந்த மாதிரி செயல்களுக்கு, சேவை என்று கொச்சைப் படுத்த வேண்டாம்.
எந்த ஓரு செயல்களுக்கும் ஈடாக பணமோ, பொருளோ பெற்றால், அது வேலையே அன்று சேவையாகாது. மக்களின் தேவையறிந்து எந்த பிரதிபலனையும் எதிர்ப்பாராமல் உங்களின் “சேவை” யை செய்யுங்கள், இல்லையேன்றால் செய்த “வேலை”க்கு (செய்தால்) கூலி வாங்கிக் கொண்டு செல்லுங்கள். சமூக சேவை என்பது நமது பயோ-டேட்டாவை அலங்கரிக்கும் தகவலும் இல்லை.... சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் விஷயமில்லை.
புரிந்தவர்கள் தாங்களை மாற்றிக் கொள்ளட்டும், புரியாதவர்கள், புரிந்துக் கொள்ளும் நாள் மிக அருகில் உள்ளது.