அதிமுவிற்க்கு இது சோதனை மேல் சோதனையான காலம் தான். அதிமுவின் தற்போதைய அரவாண் களப்பலி தினகரன். முழுமையாக தினகரன் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
முன்பு ஒரு முறை சசிகலாவை வெளியேற்றி, ஜெயலலிதா தன்னை நல்லவராக காட்டி கொண்டார். அனைத்திற்கும் சசிகலாவும் அவரது குடும்பத்தினருமே காரணம்! என்றார். அதுப்போல அனைத்திற்கும் சசிகலாவும், தினகரனும், காரணம் என்று சொல்லி தன்னை ஒபிஎஸ் நல்லவராக காட்டிக்கொள்ள முற்படுவது, கேவலமான ஒன்று.
ஐயா பன்னீர் அவர்களே! பைபிளில் ஏசு சொல்வாரே, உங்களில் எவர் பாவம் செய்யவில்லையோ? அவர்கள் இந்த பெண் (வேசி) மீது கல்லால் அடியுங்கள்! அதுப் போல உங்களில் யார் ஊழல் செய்யவில்லையோ? அவர்கள் சசிகலா மீது கல்லால் அடியுங்கள்.
இன்று சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க சொல்லும், ஒரு காலத்தில் இல்லை, சில மாதங்கள் முன்பு வரை சசிகலாவின் ராஜ்யத்தில் அவரின் நம்பிக்கை பெற்ற தளபதியாக விளக்கினார் என்பதை காலம் சாட்சி சொல்கிறது. இந்த ஐயா பன்னீர் தான் ஊழல் பணத்தில் தன்பங்கை எடுத்து கொண்டு, சசி அன் கோவிற்கு கப்பம் கட்டியவர் .
இன்று சசிகலாவை நோக்கி வைக்கப்படும் அனைத்து வாதங்களிலும் ஐயா பன்னீர் அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. சசிகலாவின் கண் பார்வைக்கு காத்திருந்த அவர்களே! காற்று இன்று உங்கள் பக்கம் வீசுகிறது. நாளையே வேறு ஒரு கட்சியின் அரசு பொறுப்பேற்று ஜெயலலிதாவின் மர்ம மரணம் விசாரிக்கப்பட்டால் முதலில் ஆஜராக வேண்டியது சசிகலா அல்ல! அப்போது பொறுப்பில் இருந்த நீங்களே.
நத்தம் விஸ்வநாதனும், அய்யா பன்னீர் அவர்களும் வாழும் காமராஜரா என்ன? மீண்டும் முதல்வராக துடிக்கும் அய்யா பன்னீர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை மக்கள் பார்வைக்கு தயாரா?. CBI மற்றும் வருமான வரி அதிகாரிகள், தினகரன் விஜய பாஸ்கரன் ஆகிய இருவர் மீதும், வழக்குகள் மூலம் அதீத ஆர்வம் காட்டும் மோடி அரசு வசதியாக மறந்த வழக்குகள் கரூர் அன்பு நாதன், சேகர் ரெட்டி, மணல் மாபியா என தொடர்கிறது.
சசிகலாவும், தினகரனும் நீங்கப்பட்டால் அதிமுக சுத்தம் ஆகிவிடுமா என்ன? அடிமைதனமும், ஊழல் பணத்தை பங்கு போடுவது தான் பிரத்தியேக அக்மார்க் ப்ராண்ட்.
சிவன் புட்டுக்கு மண் சுமந்த புராணம் தெரியும் ஆனால் பதவிக்கு, பணத்தாசைக்கு ஐயா பன்னீர் சசிகலாவை சுமந்த கதையை நாம் அறிவோம். இறைவன் பரி தன்னை நரியாக்கியதுப் போல, மோடி பன்னீர் என்னும் நரியை பரியாக்க முயல்கிறார்.